Tuesday, March 16, 2010

சவுக்குக்கு ஒரு சவுக்கு !

பதிவுகள் தர்ற சுதந்திர உற்சாகத்துல தமிழ் பதிவுலகில் நாளாந்தம் கருத்து வெந்த சாமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சொல்லி வைத்தாற் போல இவர்கள் அனைவரும் அப்பழுக்கற்ற இருபத்தி நாலு கேரட் சொக்க கொள்கைவாதிகள். மயிர் நீத்தால் உயிர் நீக்கும் தன்மானத்தவர்கள்.ஆரம்பத்தில் இவர்களின் கொனஷ்ட்டைகள் எரிச்சலாய் இருந்தாலும் நாளடைவில் காமெடி பீஸாய் கருதி கடந்து போய் கொண்டிருந்தேன்.

இன்றைக்கு ஒரு திரட்டியில் சவுக்கு என்பாரின் ஒரு பதிவினை காணக் கிடைத்தது. பதிவின் தலைப்பு ”கருணாநிதி பேசுவதை கேளுங்கள் முட்டாள்களே…”.

அடங்கொய்யால! வாசகர்களை கவர என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று அவரின் பதிவில் ஊடுருவினேன்.காவல்துறை மூன்று போராட்டங்களுக்கு அனுமதி தரவில்லையாம், கருணாநிதி பிரியாணி பொட்டலம் தந்தாராம்.ஹிண்டு ராம் ஹிந்தி பாட்டு போடறதா சொன்னாராம்.அதுக்கு, ஹிந்தி பாட்டுக்கு மட்டும், நாட்டுக்கு வேணாம்னு கருணாநிதி சொன்னாராம். அப்புறம் கருணாநிதியை வசைமாறி பொழிந்து முடித்திருக்கிறார் இந்த கொள்கைத் தங்கம்.

காவல்துறை அனுமதி மறுத்தா தடையை மீறின்னு சொல்லி போட்டோவுக்கு போஸ் குடுத்து படங்காட்டுவாங்களே...அதெல்லாம் இவருக்கு தெரியாது போல. . . ..

கருணாநிதியை வசைபாடும் இவர்கள் கண்ணுக்கு செயலலிதா என்றைக்குமே தெரியமாட்டார், இது இம்மாதிரியான ஆசாமிகளிடம் காணக்கிடைக்கும் ஆச்சர்யமான ஒற்றுமை. அந்த அம்மாவை ”ஈழத்தாய்” ன்னு சொல்லி தனியா சந்தோசப் படுவாகளோ என்னவோ. ஆனால் கொழுத்த திராவிட குஞ்சுகளாய் காட்டிக் கொள்ள பார்ப்பனீயம் வெங்காயம்னு வசதியா பேசீருவாங்க....

தமிழக மக்கள் உரிமை கழகம் என தன் பதிவுக்கு பெயர் வைத்திருக்கிறார். தமிழர் உரிமைக்காக இவர் என்னதான் எழுதியிருக்கிறார் என பதிவு முழுவதையும் மேய்ந்தால் அதில் பெரும்பாலும் கருணாநிதியை திட்டித் தீர்க்கும் பதிவுகள்தான் . அ.இ.அ.தி.மு.க வின் தீவிர விசுவாசியாக இருப்பாரோ என்கிற சந்தேகமே வந்து விட்டது எனக்கு....அம்மா மட்டும் இந்த பதிவினை பார்த்தால் சவுக்குக்கு பட்டு குஞ்சலம் கட்டினாலும் கட்டுவார்.....அத்தனை காட்டமாக கருணாநிதியை விமர்சித்திருக்கிறார்.

பதிவின் மேலே பிரபாகரனின் படம் வேறு. . . . ஈழத்தமிழ் பதிவர்களை குறிவைத்துப் போட்டிருக்கலாம். அதற்கு பதிவின் தலைப்பை தமிழர் உரிமை கழகம் என்றாவது வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்தால் எல்லா பதிவுகளிலும் கருணாநிதியை திட்ட முடியாதே என்பதற்காக தமிழகத்தை சேர்த்திருப்பார் போலும்.

தன்னை புத்திசாலியாக அவர் கருதிக் கொள்ளட்டும், அதற்காக வாசகனை முட்டாள் எனச் சொல்லும் அதிகாரத்தை இவருக்கு யார் தந்தது?, அந்த கோவத்தின் வெளிப்பாடுதான் இந்த பதிவு!. . . . அப்புறம் வரும் போது அவர் பதிவில் மூன்று பின்னூட்டங்கள் போட்டேன். அதில் ஒன்றை அவர் வெளியிடுவார் என நான் எதிர்பார்க்கவில்லை....எனவே அந்த பின்னூட்டம் கீழே!

தமிழக மக்கள் உரிமை கழகம் ன்னு பேரு வச்சிட்டு பிரபாகரன் படம் போட்ருக்கீங்க....

அந்த இடத்துல உங்க படத்த போடுங்க...எத்தனை நாளைக்குத்தான் அடுத்தவன் காலையே நக்கீட்டு இருக்கறது. நமக்கு நாமதான் தலைவர்னு சொல்ற தன்னம்பிக்கை வரனும் அதான் உரிமைக்கான முதல் படி. . .

பெரியாரை பாருங்க எவனை கட்டீட்டு அழுதாரு...அவருதான்யா சிங்கம்....யோசிங்க பாஸ்!

சவுக்கால அடிச்ச மாதிரி இருக்கேன்னு பின்னூட்டத்த பப்ளிஷ் பண்ணாம விட்றாதீக!

Wednesday, March 3, 2010

சாருவுக்கு ஒரு வார்த்தை!

பரவசத்தில் அவிழ்த்துப் போட்டுக் கொண்டு ஆடவும் வேண்டாம்...

பின்னர் எதை பொத்துவது என தெரியாமல் அல்லல் படவும் வேண்டாம்....

Tuesday, March 2, 2010

நித்யானந்தருக்கு நன்றி...

நான் நித்யானந்தரின் செயல் பாடுகளை விமர்சன பதிவாக, ”ப்ளாஸ்டிக் புன்னகையும், நித்யானந்த அனுபவமும்” எழுத ஆரம்பித்து தொடர இருந்த சூழ்நிலையில் இன்றைக்கு சன் டிவியின் புண்ணியத்தால் பெரிதான ஆச்சர்யங்கள் ஏதுமில்லாமல் இத்தனை சீக்கிரத்தில் அவரின் ஆன்மீக வியாபாரம் முடிவுக்கு வந்ததை எண்ணி பரிதாபமே மிஞ்சுகிறது.

மிகவும் நேர்த்தியாக எடிட் செய்யப் பட்டிருக்கும் அந்த வீடியோவில், நித்யானந்தர் என்கிற ராஜசேகரனுக்குள் இருக்கும் காதலும், காமமும் கடை விரிக்கப் பட்டிருக்கிறது.”உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும், உன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்” என்கிற கவியரசரின் அனுபவ ஞானத்தின் வீர்யத்தை இனிவரும் நாட்களில் இவரின் விசயத்தில் நாம் காணப்போகிறோம்.

நேற்றுவரை அவரை ஆராதித்தவர்கள் இனிமேல், ”நான் அன்னிக்கே சொன்னேன்”...என்று தங்களை காத்துக் கொள்ளும் நாடகங்களும் அரங்கேறும். இனி வரிசையாய் சில பெண்கள் என்னை கெடுத்தார் என கிளம்பி வரலாம்.தொழில்(!) போட்டியால் எதிர்வரிசை சாமியார்கள் பண்ணிய செட்டப் என நித்யானந்த கோஷ்டியினர் சோக நாடகம் போடலாம்.

எது எப்படியோ, முற்றும் துறந்தவர் என்றும் எல்லாம் கடந்தவர் என்றும் தன்னைச் சுற்றி நிர்மானித்து வைத்திருந்த பிம்பம் உடைந்து சிதறியதை அந்த இளைஞர் வரும் நாட்களில் எப்படி எதிர் கொள்ளப் போகிறார் என்பதே என்னுடைய ஆர்வமான எதிர்பார்ப்பு. CRISIS MANAGEMENT என்பது மிகச் சிரமமான ஒரு கலை. பொறுத்திருந்து பார்ப்போம்.

இனி தலைப்புக்கு வருவோம்.....

இனி வரும் நாட்களில், அவரின் இத்தனை நாளைய ஆன்மீகமும், போதனைகளும் மறந்து போய் ஒரு கீழ்த்தரமான மனிதராய் இந்த சமூகத்தால் பார்க்கப் படுவார், பரிகசிக்கப் படுவார். பொய்யான பிம்பங்களை கட்டமைப்பதில் உள்ள ஆபத்து இதுதான். எல்லாம் மாயை எனச் சொல்லும் இவர்கள் புகழுக்கும், பணத்துக்குமாய் கடவுள் வேஷம் கட்ட தயங்காதவர்கள் என்பது முரண் நகை.

இயல்பாய் இருத்தல் என்பது விலங்குகளில் மட்டுமே சாத்தியம். மனிதன் உடையனியத் துவங்கிய போதே இயல்பு விலகிவிட்டது.வேஷங்கள் என்பது இல்லாமல் மனிதம் இல்லையென்றாலும், மிகை வேஷங்களில் எனக்கு எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை.

இதுவரையிலான வாழ்க்கையில் எனது பலம்,பலவீனங்களை பெரிதாய் மறைத்ததில்லை,இயல்பானவனாகவே இருந்திருக்கிறேன், அல்லது என்னை மற்றவர்களைக் காட்டிலுமான மிகை மனிதனாய் நிர்மானித்துக் கொள்ளும் முனைப்பும் இருந்ததில்லை.பொய்யான பாவனைகளினால் பிம்பங்களை கட்டமைக்காமல் போனதினால் சமயங்களில் எனக்கு பாதகமும் நேர்ந்திருக்கிறது.

அவ்வப்போது இது குறித்த கவலைகள் எனக்குள் வருவதுண்டு. ஆனால் இப்போது இதை எழுதும் சமயத்தில் இதுவரையிலான எனது நிலைப்பாடுகள் குறித்த பெருமிதமே ஓங்கியிருக்கிறது. இதற்காகவேனும் அந்த இளைஞருக்கு எனது நன்றிகளை உரித்தாக்க வேண்டும்......

Wednesday, February 24, 2010

வாழ்த்த வயதுதான் வேண்டுமா ?

நேற்றைக்கு இங்கே திரும்பிய பக்கமெல்லாம் அம்மாவை வாழ்த்தி மண்ணிக்கவும் வணங்கி போஸ்ட்டர்கள், ப்ளக்ஸ். எல்லாம் அம்மாவுக்கு அறுபத்தி இரண்டு வயதான கொண்டாட்டம்தான்.அம்மாவை போற்றிய அதியற்புதமான ஆராதனைகள் மற்றும் ஸ்தோத்திரங்களுடன் கீழே, வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம் என சொல்லி வைத்த மாதிரி எல்லோரும் போட்டிருந்தனர்.

இந்த எதுகை மோனை வாசகத்தை எந்த புண்ணியவான் உருவாக்கினாரோ தெரியவில்லை. ஈயடிச்சான் காப்பியாக அத்தனை பேரும் பயன்படுத்துகிறார்கள்.உண்மையில் ஒருவரை வாழ்த்த என்ன தகுதி வேண்டும் நெகிழ்ந்த மனதுதானே வேண்டும். வயதுக்கும், வாழ்த்துக்கும் எதேனும் தொடர்பு இருக்கிறதா.

ஒருவரை தினம்தோறும், எவரும் வாழ்த்திக் கொண்டே இருக்கப் போவதில்லை, அல்லது தினமும் அதற்கான காரண காரியங்களுக்கும் வாய்ப்பில்லை. அப்படி இருக்க ஏதோ ஒரு நாளில் வாழ்த்த வேண்டிய சந்தர்ப்பத்தில் கூட இவர்கள் வணங்குவதாய் போஸ்ட்டர் அடிப்பதன் மூலம், அன்றைக்கு மட்டும்தான் வணங்குவார்கள் மற்ற நாட்களில் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்பது மாதிரியான கள்ளத்தனம் வந்து விடுகிறதல்லவா!

புத்தாண்டு மாதிரியான கொண்டாட்ட காலங்களில், வயதைப் பார்த்தா ஒவ்வொருவரும் வாழ்த்தும், வணக்கமும் சொல்லுகிறார்கள்.

திராவிட இயக்கத்தின் காக்காய் மற்றும் காலில் விழும் கலாச்சாரத்தில் அவமானகரமான எச்சமாகவே எனக்கு இந்த வாசகம் தோன்றுகிறது.

”அம்மா”விற்கு எனது தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Tuesday, February 23, 2010

ரொம்ப நாளாய் தேடிய பாடல்...!



சமீபத்தில் வெளியான 'மாயாண்டி குடும்பத்தார்' படத்தில் வரும் ஒரு முதலிரவு காட்சியில் பிண்ணனியில் ஒலித்த பாடல் இது. கேட்ட மாத்திரத்தில் ரசிகனாய் போனேன். இனையம் முழுதும் தேடிக் களைத்தும் கிடைக்காத இந்த பாடல் சற்று முன்னர் தானாய் வந்து சிக்க....ஒரே இன்ப அதிர்ச்சி!

மச்சமே உடம்பாய் பிறந்தவர் தலைவர்தான்! கொடுத்து வச்ச மகராசன், ராதா சலூசாவை ஒரு வழியாக்கி விடுகிறார். ம்ம்ம்ம்...நமக்கு அது முக்கியம் இல்லை....பாடல் வரிகளை கவனியுங்கள் எத்தனை எளிமையான வார்த்தைகள், வருடும் மெட்டமைப்பு....

ஆனந்த பாடத்தின் அரிச்சுவடி
ஆரம்பமாகட்டும் அனைத்த படி
தேன் அள்ளி பூமுத்தம் தெளித்த படி
எனை தழுவட்டுமே தினம் இந்த பருவக் கொடி!

இதுதான் ரொமான்ஸ்...

கேட்டு மகிழுங்கள்....பார்த்தால் வயிற்றெரிச்சல் வரும்!

கேட்டதில் பிடித்தது....!



கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம்

கண்டவுடன் காதல் நெஞ்சில் கொண்டது பாவம்

கொண்டவுடன் பிரிவை சொல்லி வந்தது பாவம்

வெறும் கூடாக பூமியில் வாழ்ந்தென்ன லாபம்!

Sunday, February 21, 2010

ப்ளாஸ்டிக் புன்னகையும், நித்யானந்த அனுபவமும்

கடந்த வார இறுதியின் அனுபவம்/அவஸ்தையை பற்றி கொஞ்சம் பிரஸ்தாபிக்கலாம் என்று இந்த பதிவு !

எனது நினைவாற்றல் குறித்தான கவலை அவ்வப்போது வருவதுண்டு.எதைக் கொட்டினாலும் தங்குவதில்லை, 'நிறைகுடம்' நானென பெருமையடித்துக் கொள்ளலாம். சமீபத்தில் சாரு நிவேதிதாவின் பதிவில் ஸ்ரீ நித்யானந்தரின் அதீத நினைவாற்றல் பயிற்சி என ஒரு விளம்பர பதிவிட்டிருந்தார்.

சமீப நாட்களில் சாருவின் பதிவுகளில் இம்மாதிரியான நித்யா புராணம் படித்து கிளர்ச்சி அடைந்தவர்களில் நானும் ஒருவன்.நித்யானந்தரின் பல யூட்யூப் க்ளிப்பிங்குகள் வேறு, இந்த ஆளிடம் ஏதோ சரக்கு இருக்கிறது என எண்ண வைத்திருந்தன.

நித்யானந்தரை நேரில் பார்க்க ஒரு வாய்ப்பு அத்தோடு, நான் அதீத நினைவாற்றல் பெற்றவனாகி விடும் சாத்தியம் வேறு கைகூடி வருகிறது! என்னே ஒரு பாக்கியம்! தொலை பேசினேன்.....

நித்யானந்தம்! , யார் மூலமா தெரிஞ்சிகிட்டீங்க?

எழுத்தாளர் சாரு நிவேதிதாவோட சைட்ல போட்ருந்தாரு !

அவசியம் வாங்க, வரும் போது உங்களுக்கு தெரிஞ்சவங்களையும் கூட்டீட்டு வாங்க!

நித்யானந்தர் க்ளாஸ் எடுப்பாரா? ஃபீஸ் எவ்வளவு ஆகும்?

மஹராஜ்தான் க்ளாஸ் எடுப்பார், எழுநூற்றி அய்ம்பது ஆகும்.

ம்ம்ம்ம்....எத்தனை மணிக்கு அங்க இருக்கனும்?

காலை எட்டு மணிக்கெல்லாம் வந்துருங்க, ஆன் த ஸ்பாட் ரிஜிஸ்ட்ரேஷன்.பதின்மூன்று வயசுக்கு மேல உள்ளவங்களுக்கு மட்டும்தான் அனுமதி.

ரொம்ப தேங்க்ஸ்ங்க, வந்துர்றேன்....

நித்யானந்தம்....


சனிக்கிழமை காலை எட்டு மணி, என்னுடைய நினைவாற்றலை பல மடங்கு அதிகரிக்கும் பேராசையில், வீட்டில் அனைவரின் கேலியையும் பொருட்படுத்தாத கர்ம வீரனாய் ஹோட்டல் காஞ்சியில் காலடி வைத்தேன். வலது புறம் இருந்த கல்யாண மஹால் போன்றதொரு பகுதியில், எழும்பூர் மற்றும் மயிலாப்பூர் நித்யானந்த சபைகள் ஃப்ளெக்ஸ் மூலமாய் வரவேற்றனர்.

சிவந்த மேனியராய், வெள்ளுடையில் ஆண்களும், பெண்களும் ...... வாலண்டியர்களாம்!, ஒரு விண்ணப்பதைக் கொடுத்து பூர்த்தி செய்ய சொன்னார்கள், கர்ம சிரத்தையாய் செய்தேன். என் பெயரை நித்யானந்தர் மாற்றிட விருப்பமா என்று கேட்டிருந்தனர். சற்றே யோசித்தேன்! ,ஏதாவது ஒரு பாடாவதி பெயரை அவர் வைக்கப் போய், அந்த ராசியில் நான் அடுத்த அவதார புருஷனாகி விட்டால்....நினைக்கவே பீதியாக இருந்தது.

என்னோடு விண்ணப்பம் பூர்த்தி செய்தவர்களில் பெரும்பாலானவர்கள், 'அவா' வாகவே இருந்தனர். எல்லாவற்றிலும் முந்திக் கொள்ளும் அவர்களின் விழிப்புணர்வு குறித்து பொறாமையாகவே இருந்தது. ஸ்பீக்கரில் நித்யானந்தரை வானுக்கும், மண்ணுக்குமாய், ஆண்டவரே!..தாண்டவரே! என நாட்டுப் புற மெட்டுக்களில் போட்டு தாக்கிக் கொண்டிருந்தனர்.

அங்கிருந்தவர்களின் ‘நேக்கு','நோக்கு' சம்பாஷைனகளில் எரிச்சலாகி எத்தனை மணிக்குத்தான் துவங்குவீர்கள் என கேட்டேன். பத்து மணிக்கு என ஈவிரக்கமில்லாமல் சொன்னார்கள். எட்டு மணிக்கே எதுக்கு வர சொன்னீங்க என்கிற என் கேள்விக்கு , எட்டு மணியில் இருந்து ரிஜிஸ்ட்ரேசன்னு சொல்லீருப்பாங்க என அசராமல் பதில் வந்தது. என் நினைவாற்றலின் மீதிருந்த நம்பிக்கையினால், அவர்களின் பதில் கோவத்தை தரவில்லை, எரிச்சல் தான் மண்டியது.

இந்த இடத்தில் ஹோட்டல் காஞ்சியை பற்றி சில வார்த்தைகள் ....... நகரின் இதயப் பகுதியில், கால ஒட்டத்தின் கவனிப்பு போதாமல் அழுக்காய் இருக்கும் மூன்று நட்சத்திர(!) ஹோட்டல். பணியாளர்களுக்கு கலர்கலராய் சீருடைகள் ,ஆனால் வருடத்திற்கு ஒரு முறைதான் வாஷிங் அலவன்ஸ் தருவார்கள் போலிருக்கிறது.

அழுது வடிகிறது ரெஸ்ட்டாரண்ட்...... பொங்கல்,வடை கேட்டேன்!, காபி குடிக்கும் சாசரில் பொங்கலை வைத்து அதன் தலையில் ஒரு ஸ்பூன் குத்தி, வடை ஓரத்தில் தொற்றிக் கொண்டு வந்தது. சரி சாப்பிட தட்டு தருவார்கள் என காத்திருந்தேன்.... காத்திருதேன்...., பொறுமையிழந்து ஒரு தட்டு கொடுக்கச் சொல்லி கேட்டால் சர்வர் நான் ஜோக்கடிப்பதாய் நினைத்து சிரித்துக் கொண்டே, இங்க இப்படித்தான் தர்றது என அலட்சியமாய் சொல்ல.....கடுப்பேறியது. அந்த அதிகாலை நேரத்தில் எனக்குள் இருந்த மிருகம் தூங்கிக் கொண்டிருந்த படியால் அவர் தப்பினார். காஃபி நன்றாக இருந்தது. அறுபத்தி ஐந்து ரூபாய் மொய்ய்ய்ய்ய்...

ஒரு வழியாய் கல்யாண மஹாலில் நுழைந்தேன்.....வாசலில் குறிப்பெடுக்க ஒரு நோட்டும், பேனாவும் கூடவே ஒரு முழ நீளத்தில் ஒரு துணியும் கொடுத்தார்கள். எதற்கென்று புரியவில்லை. சம்பந்தமே இல்லாமல் கோவனமும் அது தொடர்ச்சியான எண்ணங்களும் கிலியேற்படுத்த ஆனது ஆகட்டும் என உள்ளே நுழைந்தேன்.


மேடையில் ஒரு சிம்மசனம் போட்டிருந்தார்கள். அதில் நித்யானந்தரின் பெரிய படம் வைத்திருந்தார்கள். அதற்கு கீழே காவித் துணி போர்த்திய இன்னொரு சிம்மாசனம். லேசாக பொறி தட்டியது, மஹராஜ்தான் நடத்துவார்னு சொன்னாங்களே....அப்ப நித்யானந்தர் மஹராஜ் இல்லையா?

தொடரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......