Friday, April 16, 2010

......ம்ம்ம்ம்ம்ம்ம்ம்



என் பால்யத்தின் நினைவில் உறைந்த பாடல்களில் இதுவும் ஒன்று. சில நிகழ்வுகள் எத்தனை காலமானாலும் சூடாய்,சுகமாய் நினைத்த மாத்திரத்தில் நம்மைச் சாய்த்துவிடும். அப்படியான தருணங்களில் ஒன்றுதான் குர்பானி, அப்பாவின் கையைப் பிடித்துகொண்டு போய் பார்த்த படங்களில் இதுவும் ஒன்று.

விளக்குகள் ஜொலிக்க திரை உயர்வதும், வெதுவெதுப்பான இறுக்கத்தில் பாப்கார்ன் நெடி சூழ்ந்த இருட்டில் திரையில் மிளிர்ந்த காட்சிகளை அம்மாவின் புடவை தலைப்பை இழுத்து தலையில் போர்த்திக் கொண்டு பார்த்ததெல்லாம் நேற்றுத்தான் நடந்தது போலிருக்கிறது.

அவ்வப்போதைய, இத்தகைய நினைவுகள்தான் நான் இன்னமும் தொலைந்து போகவில்லை என்பதை எனக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது....உணர்த்திக் கொண்டிருக்கும்....ம்ம்ம்ம்ம்ம்ம்

Saturday, April 10, 2010

சித்தர்களும், ரகசியங்களும், சில எரிச்சல்களும்

நிறைய கோபத்துடன் எழுதத் துவங்கிய பதிவு இது....

சமீப நாட்களாய் சித்தர்கள் பற்றிய பதிவொன்றை தொடர்ந்து படித்து வருகிறேன். அரிய பல தகவல்களை தொகுத்து வழங்குகிறார்.இம்மாதிரியான முயற்சிகள் வரவேற்கப் படுதல் மிக அவசியம்.அவருக்கு நமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.

இனி நம் கதைக்கு வருவோம் !

சித்தர்கள், தங்களின் அனுபவ குறிப்புகளை பாடல்களாய் எழுதி வைத்திருக்கின்றனர். அவர்களின் சீடர்களின் வாயிலாக வழி வழியாய் கொண்டு வந்து சேர்க்கப் பட்டதுதான், தற்போது நமக்கு கிடைத்திருக்கும் பாடல்கள். இந்த பாடல்களின் நம்பகத் தன்மை குறித்த சந்தேகங்கள் எனக்கு நிறையவே உண்டு.

தங்களின் கண்டுபிடிப்புகளின் ரகசியம் பாதுகாக்கப் பட வேண்டும் என்பதுதான் பெரும்பாலான சித்தர்களின் பிரதான முன் தீர்மானமாய் இருந்திருக்கிறது. இதன் பொருட்டே பெரும்பாலான சித்தர்களின் பாடல்கள் எளிதில் பொருள் அறிய இயலாத மறைமொழியில் எழுதப்பட்டிருக்கலாம் அல்லது நேரடி பொருள் தரும் வகையில் அருளப் பட்ட பாடல்கள், காலப் போக்கில் அவரது சீடர்களினால் மறை மொழியாக திரிக்கப்பட்டிருக்கும் வாய்ப்புகளும் உண்டு.

இன்றைக்கும் கூட இந்த பாடல்களின் மறைபொருளை பிரித்தறியும் வல்லமை உடையவர்கள் நம்மிடையே இருக்கின்றனர். ஆனால் அவர்களும் கூட உண்மைப் பொருளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள தயங்குகின்றனர். இதை மிகவும் ஏமாற்றமளிக்கும் ஒரு கூறாகவே கருதுகிறேன்.

குருவின் உத்தரவு இல்லாமல் இவற்றை எவருக்கும் சொல்லக் கூடாது, தகுந்த குருவின் மேற்பார்வையில்லாமல் இவற்றை செய்தால் பலிக்காது என்றெல்லாம் கூறி, பாடல்களின் ரகசியம் காக்கப் படுதல் என்பதன் பின்னனியில் இவர்களின் குறுகிய சுயநலத் தன்மையே மேலோங்கி இருப்பதாக சந்தேகங்கள் எனக்கு உண்டு.

இன்றைக்கு மேற்கத்திய மருத்துவ முறையான அலோபதி உலகெங்கும் கோலேச்சுகிறது. இத்தனை அபரிமிதமான வளர்ச்சிக்கு உண்மையான காரணம் அதன் நுட்பங்களும், அறிவியலும் பொதுவில் வைக்கப் பட்டதும், விவாதிக்கப் பட்டதுமே....ஆர்வம் உள்ளோரின் பங்களிப்புகள் ஏற்றுக் கொள்ளாப் பட்டதன் மூலமாக தொடர்ச்சியான புதிய மேம்படுத்தப் பட்ட உத்திகளை பயன் பாட்டிற்கு கொண்டு வந்திருப்பதால்தான் இன்றைக்கு அனைவரும் கண்ணை மூடிக் கொண்டு பயன் படுத்திக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், காலம் காலமாக நமது சித்தவைத்திய சிகாமனிகள், வெறும் வாய்ச்சவடால்தான் அடித்துக் கொண்டிருக்கின்றனர். எங்களிடம் எல்லா நோய்களுக்கும் தீர்வு இருக்கிறது...ஆனால் அதைச் சொல்ல உத்தரவில்லை, வெங்காயமில்லை என்பது மாதிரியான எரிச்சல் தரும் வியாக்கியானங்களையே சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஒரு வழியாய் இந்திய அரசு இப்போது தீவிரமாய் சித்த மருத்துவ நுட்பஙக்ளை ஆராய ஆரம்பித்திருப்பது நல்ல செய்தி. நமது அரசுக்கு எந்த சித்தர் உத்தரவு கொடுத்தார் என தெரியவில்லை.

சித்தர்களின் குறிப்புகள் எழுதப் பட்ட காலகட்டத்தில் இவற்றின் ரகசியம் காக்கப்பட வேண்டும் என நினைத்திருக்க தேவையான சமூக காரணங்கள் இருந்திருக்கலாம். இன்றைக்கு மாறிவிட்ட காலச் சூழலில் அவர்களின் நுட்பங்களும், கண்டுபிடிப்புகளும் அவசர யுகத்தின் மனிதனுக்குப் பயன் படுமாயின் அதை பொதுவில் கொண்டு வருவதில் தப்பேதுமில்லை.

நான் உணர்ந்த வரையில் சித்தர்களின் அவதானிப்பில் மனித உடலானது பஞ்ச பூதங்களினால் பிசையப் பட்ட கலவை. இவற்றை வாதம், பித்தம், கபம் என்கிற மூன்று தாதுக்களும், ஐந்து வாயுக்களும் நிலை நிறுத்துகின்றன. இவற்றின் சம நிலை பாதிக்காத வரையில் மனித உடலுக்கு ஊறு விளைவதில்லை. இவற்றில் ஏதேனும் குறைபாடுகள் உண்டானால் ஏற்படும் சிரமங்களுக்கான தீர்வே சித்த மருத்துவம்.

காயகற்பம் என்பது மேற்சொன்ன சமநிலையினை பராமரித்து உடலை வலுவாக்கும் அல்லது வலுவாய் வைத்திருக்கும் சித்த வைத்திய தயாரிப்புகள். இத்தனை எளிதான அடிப்படையின் மீது கட்டமைக்கப் பட்ட மருத்துவ முறையினை இன்னமும் ரகசியம், வெங்காயம் என்கிற பெயரில் சக மனிதனுக்கு கிடைக்காமல் மறைத்து வைப்பது ஈனத்தனமான செயலாகவே கருதுகிறேன்.

இன்னமும் நிறைய எழுத வேண்டியிருக்கிறது.....சில காயகற்ப முறைகளை எதிர்வரும் பதிவுகளின் வாயிலாக விவாதிக்கலாமா என நினைக்கிறேன். நான் அறிந்தவைகளை பொதுவில் வைத்து விவாதித்து அதன் சூட்சுமத்தினை அனைவரும் பகிர்ந்து கொள்வது அந்த பதிவுகளின் நோக்கமாய் இருக்கும்.

எனக்கு குறிப்பிட்ட யார் மீதும் பகையில்லை, அவர்களின் பொதுவான மனப்போக்கின் மீதான கோபம் மட்டுமே...

பதிவின் நீளம் கருதி இந்த அளவில் நிறுத்தி.....இனி வரும் பதிவுகளில் தொடர்கிறேன்.






Thursday, April 1, 2010

சாருவை வாரும் ஜெமோ!

எழுத்தாளர் சாரு நிவேதிதாவை எல்லாரும் நய்யப்புடைத்து களைத்திருக்கும் வேளையில், அவரின் ஆதர்ச எதிரியான எழுத்தாளர் ஜெயமோகன் ஏப்ரல் ஒன்னாம் தின சாக்கில், தனது வலைத் தள கட்டுரையில் சாருவை புரட்டிப் புரட்டி எடுத்திருக்கிறார்.

பாவம், எத்தனை நாளைக்குத்தான் வலிக்காத/உறைக்காத மாதிரியே சாரு நடிக்கப் போகிறாரோ!

இனைப்பு கீழே...

http://www.jeyamohan.in/?p=6954

Wednesday, March 31, 2010

மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் த டே!

மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு ஏப்ரல் ஒண்ணுன்னா சந்தோஷம்தான், ஏன்னா என்னை மாதிரியான மக்களுக்காகவே பரிசளிக்கப்பட்ட நாளாச்சே!.....

என்னை ஒரு முட்டாளாக என ஒத்துக்கொள்வதில் எனக்கு எப்போதும் தயக்கமே இருந்ததில்லை. ஒரு வகையில் அப்படி சொல்லிக் கொள்வதில் பெருமை யாகவும் உணர்ந்திருக்கிறேன்.

எதுக்கு மறைக்கனும், உண்மையில் எல்லோரும் தங்களின் நிஜங்களை ஒப்புக்கொள்ளத் துவங்கி விட்டார்களென்றால் அப்புறம் புத்திசாலிகளின் என்ணிக்கையும் தற்போது உயிருடன் இருக்கும் டைனோசர்களின் எண்ணிக்கையும் ஒன்றாய்தானிருக்கும். ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள், யார் வேண்டுமானாலும் புத்திசாலி மாதிரி நடிக்கலாம், நடிக்கவும் முடியும் ஆனால் முட்டாளாய் நடிப்பதும் கஷ்டம், நடிக்கவும் யாரும் விரும்புவதில்லை.

முட்டாளாய் இருப்பதில் நிறையவே சவுகரியம் இருக்கிறது, முதலில் உங்களுடைய அங்கீகாரத்திற்கு யாரும் போட்டியாக வரமாட்டார்கள், உங்களை பார்த்து பொறாமை படுபவர்களை தேடிக்கண்டு பிடிக்க வேண்டியிருக்கும்.கருத்து திணிப்புகளும், சுற்றுப்புற அழுத்தங்களும் உங்களை ஏதும் செய்யாது......நீங்கள் விரும்புகிற தளங்களில் எவ்வித கூச்சமும் இல்லாமல் எளிதாய் புழங்கலாம். உங்களின் உலகத்தில் நீங்கள் தனித்து விடப்படுவீர்க்ள்....அது எத்தனை சுகம் என்பதை அனுபவித்தால்தான் தெரியும்.

பங்காளிகளுக்கு எனது இனிய முட்டாள் தின வாழ்த்துகள்.....

(புதிதாய் யோசித்து எழுத சோம்பேறித்தனமாய் இருந்ததால், இது ஒரு மீள் பதிவு!)

Wednesday, March 17, 2010

கடன் தொல்லை தீர ஒரு அரிய்ய்ய்ய்ய்ய வாய்ப்பு ?

இதெல்லாம் சாத்தியமா?, நண்பர் திரு.செந்தில் கொடுத்துதவிய அரிய தகவல், யாருக்கேனும் இதனால் கடன் தீர்ந்தால், மேற்படி நண்பருக்கு உங்கள் அன்பையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கலாம்.

இனி மேட்டர் கீழே.....


உங்கள் கடன் தீர ஒரு ஜோதிட ஆலோசனை

ஜோதிடத்தில் மைத்ர முகூர்த்தம் என்று ஒரு குறிப்பிட்ட நேரம் உண்டு.இந்த நேரத்தில் நீங்கள் வாங்கியுள்ள கடனில் ஒரு சிறு பகுதியை (அசலைத் தர வேண்டும்.அசலில் 10-ல் ஒரு பங்காகக் கூட இருக்கலாம்)திருப்பித் தர வேண்டும்.அப்படி ஒரு முறை தந்தால் உங்களது கடன் பல கோடி ரூபாய்களாக இருந்தால் கூட அது விரைவில் அழிந்துவிடும்.

இந்த மைத்ர முகூர்த்தம் நேரம் காலப்பிரகாசிகை என்ற புராதன ஜோதிடப்புத்தகத்திலிருந்து கண்டறியப்பட்டு,பரிசோதிக்கப்பட்டு உலக மக்கள் நலனுக்காக வெளியிடப்படுகிறது.

2.2.2009 திங்கள் காலை 10.45 முதல் 12.45 வரை
7.2.2009 சனி காலை 6.35 முதல் 6.55 வரை
காலை 10.55 முதல் 12.55 வரை
மாலை 4.55 முதல் 6.55 வரை
இரவு 10.55 முதல் 12.55 வரை
1.3.2009 ஞாயிறு காலை 9.10 முதல் 11.10 வரை
16.3.2009 திங்கள்இரவு 10.15 முதல் 12.15 வரை
28.3.2009 சனி காலை 7.00 முதல் 9.00 வரை
12.4.2009 ஞாயிறு இரவு 8.00 முதல் 10.00 வரை
13.4.2009 திங்கள் இரவு 8.01 முதல் 8.58 வரை
24.4.2009 வெள்ளி காலை8.01 முதல் 8.30 வரை
25.4.2009 சனி காலை 5.56 முதல் 7.56 வரை
9.5.2009 சனி இரவு 8.50 முதல் 10.50 வரை
10.5.2009 ஞாயிறு மாலை 5.45 முதல் 7.45 வரை
21.5.2009 வியாழன் மாலை 5.45 முதல் 7.45 வரை
22.5.2009 வெள்ளி காலை 4.48 முதல் 6.48 வரை
6.6.2009 சனி மாலை 4.15 முதல் 6.15 வரை
17.6.2009 புதன் காலை 5.49 முதல் 7.49 வரை
4.7.2009 சனி காலை 6.21 முதல் 8.21 மற்றும் 12.21 முதல் மதியம் 4.20
வரை,மாலை 6.21 முதல் 8.21 வரை
15.7.2009 புதன் மதியம் 2.01 முதல் 4.01 வரை
31.7.2009 வெள்ளி மதியம் 2.01 முதல் 4.01 வரை
27.8.2009 வெள்ளி காலை 11.02 முதல் மதியம் 1.02 வரை
7.9.2009 திங்கள் இரவு 8.45 முதல் 10.45 வரை
24.9.2009 வியாழன் காலை 9.45 முதல் 11.45 வரை
5.10.2009 திங்கள் இரவு 7.00 முதல் 9.00 வரை
21.10.2009 புதன் காலை 8.00 முதல் 10.00 வரை
2.11.2009 திங்கள் மாலை 5.00 முதல் இரவு 7.00 வரை
14.11.2009 சனி காலை 6.07 முதல் 6.19 வரை மற்றும்
காலை 10.19 முதல் மதியம் 12.19 வரை
மாலை 4.19 முதல் 6.19 வரை
இரவு 10.19 முதல் 12.19 வரை
18.11.2009 புதன் காலை 6.56 முதல் 7.56 வரை
29.11.2009 ஞாயிறு மதியம் 3.11 முதல் 5.11 வரை
26.12.2009 சனி மதியம் 2.11 முதல் 4.11 வரை
23.1.2010 சனி மதியம் 12.00 முதல் 2.00 வரை

7.2.2010 ஞாயிறு காலை 11.00 முதல் மதியம் 1.00 வரை

19.2.2010 வெள்ளி காலை 10.00 முதல் 12.00 வரை

6.3.2010 சனி இரவு 11.05 முதல் நள்ளிரவு 1.05 வரை

13.3.2010 சனி காலை 8.23 முதல் 10.23 வரை

மதியம் 2.23 முதல் மாலை 4.23 வரை

இரவு 8.23 முதல் 10.23 வரை

18.3.2010 வியாழன் காலை 9.57 முதல் 10.30 வரை

19.3.2010 வெள்ளி காலை 8.34 முதல் 10.34 வரை

27.3.2010 சனி காலை 7.13 முதல் 9.13 வரை

மதியம் 1.13 முதல் 3.13 வரை
இரவு 7.13 முதல் 9.13 வரை
2.4.2010 வெள்ளி இரவு 9.05 முதல் 10.40 வரை
3.4.2010 சனி இரவு 8.40 முதல் 9.34 வரை

இந்த நேரங்கள் இந்தியாவின் தென்மாநிலங்களில் உள்ள அனைத்து நகரம்-கிராமங்களுக்கும் பொருந்தும்.ஒருவேளை,இதில் -மேலை கூறப்பட்டுள்ள நேரங்களில்-அல்லது சூரிய உதய நேரத்தில்-சந்தேகம் இருந்தால் மேலே குறிப்பிட்டுள்ள நேரங்களின் நடுப்பகுதியில் உங்கள் கடனை திருப்பி ஒப்படைக்கலாம்.அது,வடக்கே மும்பை முதல் தெற்கே கன்னியாகுமரி வரை பெருந்தும்.

வாழ்க வளமுடன்! வளர்க கடனில்லாமல்!!!

இதைப் பற்றி நம்ம சித்தூர். முருகேசன் அவர்கள் என்ன சொல்கிறார் என்று கேட்கலாம் என இருக்கிறேன்.