Friday, April 16, 2010

......ம்ம்ம்ம்ம்ம்ம்ம்என் பால்யத்தின் நினைவில் உறைந்த பாடல்களில் இதுவும் ஒன்று. சில நிகழ்வுகள் எத்தனை காலமானாலும் சூடாய்,சுகமாய் நினைத்த மாத்திரத்தில் நம்மைச் சாய்த்துவிடும். அப்படியான தருணங்களில் ஒன்றுதான் குர்பானி, அப்பாவின் கையைப் பிடித்துகொண்டு போய் பார்த்த படங்களில் இதுவும் ஒன்று.

விளக்குகள் ஜொலிக்க திரை உயர்வதும், வெதுவெதுப்பான இறுக்கத்தில் பாப்கார்ன் நெடி சூழ்ந்த இருட்டில் திரையில் மிளிர்ந்த காட்சிகளை அம்மாவின் புடவை தலைப்பை இழுத்து தலையில் போர்த்திக் கொண்டு பார்த்ததெல்லாம் நேற்றுத்தான் நடந்தது போலிருக்கிறது.

அவ்வப்போதைய, இத்தகைய நினைவுகள்தான் நான் இன்னமும் தொலைந்து போகவில்லை என்பதை எனக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது....உணர்த்திக் கொண்டிருக்கும்....ம்ம்ம்ம்ம்ம்ம்

Saturday, April 10, 2010

சித்தர்களும், ரகசியங்களும், சில எரிச்சல்களும்

நிறைய கோபத்துடன் எழுதத் துவங்கிய பதிவு இது....

சமீப நாட்களாய் சித்தர்கள் பற்றிய பதிவொன்றை தொடர்ந்து படித்து வருகிறேன். அரிய பல தகவல்களை தொகுத்து வழங்குகிறார்.இம்மாதிரியான முயற்சிகள் வரவேற்கப் படுதல் மிக அவசியம்.அவருக்கு நமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.

இனி நம் கதைக்கு வருவோம் !

சித்தர்கள், தங்களின் அனுபவ குறிப்புகளை பாடல்களாய் எழுதி வைத்திருக்கின்றனர். அவர்களின் சீடர்களின் வாயிலாக வழி வழியாய் கொண்டு வந்து சேர்க்கப் பட்டதுதான், தற்போது நமக்கு கிடைத்திருக்கும் பாடல்கள். இந்த பாடல்களின் நம்பகத் தன்மை குறித்த சந்தேகங்கள் எனக்கு நிறையவே உண்டு.

தங்களின் கண்டுபிடிப்புகளின் ரகசியம் பாதுகாக்கப் பட வேண்டும் என்பதுதான் பெரும்பாலான சித்தர்களின் பிரதான முன் தீர்மானமாய் இருந்திருக்கிறது. இதன் பொருட்டே பெரும்பாலான சித்தர்களின் பாடல்கள் எளிதில் பொருள் அறிய இயலாத மறைமொழியில் எழுதப்பட்டிருக்கலாம் அல்லது நேரடி பொருள் தரும் வகையில் அருளப் பட்ட பாடல்கள், காலப் போக்கில் அவரது சீடர்களினால் மறை மொழியாக திரிக்கப்பட்டிருக்கும் வாய்ப்புகளும் உண்டு.

இன்றைக்கும் கூட இந்த பாடல்களின் மறைபொருளை பிரித்தறியும் வல்லமை உடையவர்கள் நம்மிடையே இருக்கின்றனர். ஆனால் அவர்களும் கூட உண்மைப் பொருளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள தயங்குகின்றனர். இதை மிகவும் ஏமாற்றமளிக்கும் ஒரு கூறாகவே கருதுகிறேன்.

குருவின் உத்தரவு இல்லாமல் இவற்றை எவருக்கும் சொல்லக் கூடாது, தகுந்த குருவின் மேற்பார்வையில்லாமல் இவற்றை செய்தால் பலிக்காது என்றெல்லாம் கூறி, பாடல்களின் ரகசியம் காக்கப் படுதல் என்பதன் பின்னனியில் இவர்களின் குறுகிய சுயநலத் தன்மையே மேலோங்கி இருப்பதாக சந்தேகங்கள் எனக்கு உண்டு.

இன்றைக்கு மேற்கத்திய மருத்துவ முறையான அலோபதி உலகெங்கும் கோலேச்சுகிறது. இத்தனை அபரிமிதமான வளர்ச்சிக்கு உண்மையான காரணம் அதன் நுட்பங்களும், அறிவியலும் பொதுவில் வைக்கப் பட்டதும், விவாதிக்கப் பட்டதுமே....ஆர்வம் உள்ளோரின் பங்களிப்புகள் ஏற்றுக் கொள்ளாப் பட்டதன் மூலமாக தொடர்ச்சியான புதிய மேம்படுத்தப் பட்ட உத்திகளை பயன் பாட்டிற்கு கொண்டு வந்திருப்பதால்தான் இன்றைக்கு அனைவரும் கண்ணை மூடிக் கொண்டு பயன் படுத்திக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், காலம் காலமாக நமது சித்தவைத்திய சிகாமனிகள், வெறும் வாய்ச்சவடால்தான் அடித்துக் கொண்டிருக்கின்றனர். எங்களிடம் எல்லா நோய்களுக்கும் தீர்வு இருக்கிறது...ஆனால் அதைச் சொல்ல உத்தரவில்லை, வெங்காயமில்லை என்பது மாதிரியான எரிச்சல் தரும் வியாக்கியானங்களையே சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஒரு வழியாய் இந்திய அரசு இப்போது தீவிரமாய் சித்த மருத்துவ நுட்பஙக்ளை ஆராய ஆரம்பித்திருப்பது நல்ல செய்தி. நமது அரசுக்கு எந்த சித்தர் உத்தரவு கொடுத்தார் என தெரியவில்லை.

சித்தர்களின் குறிப்புகள் எழுதப் பட்ட காலகட்டத்தில் இவற்றின் ரகசியம் காக்கப்பட வேண்டும் என நினைத்திருக்க தேவையான சமூக காரணங்கள் இருந்திருக்கலாம். இன்றைக்கு மாறிவிட்ட காலச் சூழலில் அவர்களின் நுட்பங்களும், கண்டுபிடிப்புகளும் அவசர யுகத்தின் மனிதனுக்குப் பயன் படுமாயின் அதை பொதுவில் கொண்டு வருவதில் தப்பேதுமில்லை.

நான் உணர்ந்த வரையில் சித்தர்களின் அவதானிப்பில் மனித உடலானது பஞ்ச பூதங்களினால் பிசையப் பட்ட கலவை. இவற்றை வாதம், பித்தம், கபம் என்கிற மூன்று தாதுக்களும், ஐந்து வாயுக்களும் நிலை நிறுத்துகின்றன. இவற்றின் சம நிலை பாதிக்காத வரையில் மனித உடலுக்கு ஊறு விளைவதில்லை. இவற்றில் ஏதேனும் குறைபாடுகள் உண்டானால் ஏற்படும் சிரமங்களுக்கான தீர்வே சித்த மருத்துவம்.

காயகற்பம் என்பது மேற்சொன்ன சமநிலையினை பராமரித்து உடலை வலுவாக்கும் அல்லது வலுவாய் வைத்திருக்கும் சித்த வைத்திய தயாரிப்புகள். இத்தனை எளிதான அடிப்படையின் மீது கட்டமைக்கப் பட்ட மருத்துவ முறையினை இன்னமும் ரகசியம், வெங்காயம் என்கிற பெயரில் சக மனிதனுக்கு கிடைக்காமல் மறைத்து வைப்பது ஈனத்தனமான செயலாகவே கருதுகிறேன்.

இன்னமும் நிறைய எழுத வேண்டியிருக்கிறது.....சில காயகற்ப முறைகளை எதிர்வரும் பதிவுகளின் வாயிலாக விவாதிக்கலாமா என நினைக்கிறேன். நான் அறிந்தவைகளை பொதுவில் வைத்து விவாதித்து அதன் சூட்சுமத்தினை அனைவரும் பகிர்ந்து கொள்வது அந்த பதிவுகளின் நோக்கமாய் இருக்கும்.

எனக்கு குறிப்பிட்ட யார் மீதும் பகையில்லை, அவர்களின் பொதுவான மனப்போக்கின் மீதான கோபம் மட்டுமே...

பதிவின் நீளம் கருதி இந்த அளவில் நிறுத்தி.....இனி வரும் பதிவுகளில் தொடர்கிறேன்.


Thursday, April 1, 2010

சாருவை வாரும் ஜெமோ!

எழுத்தாளர் சாரு நிவேதிதாவை எல்லாரும் நய்யப்புடைத்து களைத்திருக்கும் வேளையில், அவரின் ஆதர்ச எதிரியான எழுத்தாளர் ஜெயமோகன் ஏப்ரல் ஒன்னாம் தின சாக்கில், தனது வலைத் தள கட்டுரையில் சாருவை புரட்டிப் புரட்டி எடுத்திருக்கிறார்.

பாவம், எத்தனை நாளைக்குத்தான் வலிக்காத/உறைக்காத மாதிரியே சாரு நடிக்கப் போகிறாரோ!

இனைப்பு கீழே...

http://www.jeyamohan.in/?p=6954