Saturday, April 10, 2010

சித்தர்களும், ரகசியங்களும், சில எரிச்சல்களும்

நிறைய கோபத்துடன் எழுதத் துவங்கிய பதிவு இது....

சமீப நாட்களாய் சித்தர்கள் பற்றிய பதிவொன்றை தொடர்ந்து படித்து வருகிறேன். அரிய பல தகவல்களை தொகுத்து வழங்குகிறார்.இம்மாதிரியான முயற்சிகள் வரவேற்கப் படுதல் மிக அவசியம்.அவருக்கு நமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.

இனி நம் கதைக்கு வருவோம் !

சித்தர்கள், தங்களின் அனுபவ குறிப்புகளை பாடல்களாய் எழுதி வைத்திருக்கின்றனர். அவர்களின் சீடர்களின் வாயிலாக வழி வழியாய் கொண்டு வந்து சேர்க்கப் பட்டதுதான், தற்போது நமக்கு கிடைத்திருக்கும் பாடல்கள். இந்த பாடல்களின் நம்பகத் தன்மை குறித்த சந்தேகங்கள் எனக்கு நிறையவே உண்டு.

தங்களின் கண்டுபிடிப்புகளின் ரகசியம் பாதுகாக்கப் பட வேண்டும் என்பதுதான் பெரும்பாலான சித்தர்களின் பிரதான முன் தீர்மானமாய் இருந்திருக்கிறது. இதன் பொருட்டே பெரும்பாலான சித்தர்களின் பாடல்கள் எளிதில் பொருள் அறிய இயலாத மறைமொழியில் எழுதப்பட்டிருக்கலாம் அல்லது நேரடி பொருள் தரும் வகையில் அருளப் பட்ட பாடல்கள், காலப் போக்கில் அவரது சீடர்களினால் மறை மொழியாக திரிக்கப்பட்டிருக்கும் வாய்ப்புகளும் உண்டு.

இன்றைக்கும் கூட இந்த பாடல்களின் மறைபொருளை பிரித்தறியும் வல்லமை உடையவர்கள் நம்மிடையே இருக்கின்றனர். ஆனால் அவர்களும் கூட உண்மைப் பொருளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள தயங்குகின்றனர். இதை மிகவும் ஏமாற்றமளிக்கும் ஒரு கூறாகவே கருதுகிறேன்.

குருவின் உத்தரவு இல்லாமல் இவற்றை எவருக்கும் சொல்லக் கூடாது, தகுந்த குருவின் மேற்பார்வையில்லாமல் இவற்றை செய்தால் பலிக்காது என்றெல்லாம் கூறி, பாடல்களின் ரகசியம் காக்கப் படுதல் என்பதன் பின்னனியில் இவர்களின் குறுகிய சுயநலத் தன்மையே மேலோங்கி இருப்பதாக சந்தேகங்கள் எனக்கு உண்டு.

இன்றைக்கு மேற்கத்திய மருத்துவ முறையான அலோபதி உலகெங்கும் கோலேச்சுகிறது. இத்தனை அபரிமிதமான வளர்ச்சிக்கு உண்மையான காரணம் அதன் நுட்பங்களும், அறிவியலும் பொதுவில் வைக்கப் பட்டதும், விவாதிக்கப் பட்டதுமே....ஆர்வம் உள்ளோரின் பங்களிப்புகள் ஏற்றுக் கொள்ளாப் பட்டதன் மூலமாக தொடர்ச்சியான புதிய மேம்படுத்தப் பட்ட உத்திகளை பயன் பாட்டிற்கு கொண்டு வந்திருப்பதால்தான் இன்றைக்கு அனைவரும் கண்ணை மூடிக் கொண்டு பயன் படுத்திக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், காலம் காலமாக நமது சித்தவைத்திய சிகாமனிகள், வெறும் வாய்ச்சவடால்தான் அடித்துக் கொண்டிருக்கின்றனர். எங்களிடம் எல்லா நோய்களுக்கும் தீர்வு இருக்கிறது...ஆனால் அதைச் சொல்ல உத்தரவில்லை, வெங்காயமில்லை என்பது மாதிரியான எரிச்சல் தரும் வியாக்கியானங்களையே சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஒரு வழியாய் இந்திய அரசு இப்போது தீவிரமாய் சித்த மருத்துவ நுட்பஙக்ளை ஆராய ஆரம்பித்திருப்பது நல்ல செய்தி. நமது அரசுக்கு எந்த சித்தர் உத்தரவு கொடுத்தார் என தெரியவில்லை.

சித்தர்களின் குறிப்புகள் எழுதப் பட்ட காலகட்டத்தில் இவற்றின் ரகசியம் காக்கப்பட வேண்டும் என நினைத்திருக்க தேவையான சமூக காரணங்கள் இருந்திருக்கலாம். இன்றைக்கு மாறிவிட்ட காலச் சூழலில் அவர்களின் நுட்பங்களும், கண்டுபிடிப்புகளும் அவசர யுகத்தின் மனிதனுக்குப் பயன் படுமாயின் அதை பொதுவில் கொண்டு வருவதில் தப்பேதுமில்லை.

நான் உணர்ந்த வரையில் சித்தர்களின் அவதானிப்பில் மனித உடலானது பஞ்ச பூதங்களினால் பிசையப் பட்ட கலவை. இவற்றை வாதம், பித்தம், கபம் என்கிற மூன்று தாதுக்களும், ஐந்து வாயுக்களும் நிலை நிறுத்துகின்றன. இவற்றின் சம நிலை பாதிக்காத வரையில் மனித உடலுக்கு ஊறு விளைவதில்லை. இவற்றில் ஏதேனும் குறைபாடுகள் உண்டானால் ஏற்படும் சிரமங்களுக்கான தீர்வே சித்த மருத்துவம்.

காயகற்பம் என்பது மேற்சொன்ன சமநிலையினை பராமரித்து உடலை வலுவாக்கும் அல்லது வலுவாய் வைத்திருக்கும் சித்த வைத்திய தயாரிப்புகள். இத்தனை எளிதான அடிப்படையின் மீது கட்டமைக்கப் பட்ட மருத்துவ முறையினை இன்னமும் ரகசியம், வெங்காயம் என்கிற பெயரில் சக மனிதனுக்கு கிடைக்காமல் மறைத்து வைப்பது ஈனத்தனமான செயலாகவே கருதுகிறேன்.

இன்னமும் நிறைய எழுத வேண்டியிருக்கிறது.....சில காயகற்ப முறைகளை எதிர்வரும் பதிவுகளின் வாயிலாக விவாதிக்கலாமா என நினைக்கிறேன். நான் அறிந்தவைகளை பொதுவில் வைத்து விவாதித்து அதன் சூட்சுமத்தினை அனைவரும் பகிர்ந்து கொள்வது அந்த பதிவுகளின் நோக்கமாய் இருக்கும்.

எனக்கு குறிப்பிட்ட யார் மீதும் பகையில்லை, அவர்களின் பொதுவான மனப்போக்கின் மீதான கோபம் மட்டுமே...

பதிவின் நீளம் கருதி இந்த அளவில் நிறுத்தி.....இனி வரும் பதிவுகளில் தொடர்கிறேன்.






5 comments:

  1. //எங்களிடம் எல்லாவற்றுக்கும் தீர்வு இருக்கிறது...ஆனால் அதைச் சொல்ல உத்தரவில்லை, வெங்காயமில்லை என்பது மாதிரியான எரிச்சல் தரும் வியாக்கியானங்களையே சொல்லிக் கொண்டிருக்கின்றனர். //

    என்பது விவாதத்திற்க்கு வேணும்னா நல்லா இருக்கலாம்... ஆனால் நடை முறைக்கு சாத்தியமில்லாதது.. யோககற்பம் எல்லாம் குரு இன்றி செய்ய முடியாது செய்தால் செய்பவர் சித்தாப் பிரமை பிடித்தவராக மாறும் அபாயம் உண்டு.. இது போல பல பிரச்சனைகள் உள்ளது.. அருகில் வைத்திருந்து சொல்லிக் கொடுப்பதற்கும், எழுத்தில் வடித்து சொல்லிக் கொடுப்பதற்க்கும் உள்ள வேறு பாடை தாங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்... அருகில் இல்லாமல் எழுத்துவடிவில் சொல்லும் பொது செய்பவர்க்கு தீங்கு நேராவண்ணம் எழுதவும் வேண்டும் அப்படி செய்பவர் யாராவது ஒருவரின் உதவியுடன் செய்வதே சிறந்தது என்பதாலுமே தான் நீங்கள் சொன்ன உத்தரவில்லை, வெங்காயமில்லை என்ற நிலை வருகிறது... செய்பவர்களுக்கு தீங்கு வரும் போது அது எழுதுபவரையும் பாதிக்குமல்லவா?

    ஆகவே நேரடியாக பயிற்சி அளிப்பதற்கும் எழுத்து மூலம் விளக்குவதற்க்கும் உள்ள நடை முறை சிக்கலைப் புரிந்து கொள்ள வேண்டும்..

    தெரிந்தவர்கள் நேரடியாகா பயிற்சி அளிக்கும் போதோ இல்லை, நேரடியாகா சொல்லிக் கொடுக்கும் போதோ ஏதும் சொல்லத்தவறினாலோ மறைத்தாலோ அது குற்றமே ... ஆனால் எழுத்து வடிவில் இப்படி இருக்கிறது யாரிடமாவது போய் தெரிந்து கொள்ளுங்கள் என்பது தவறல்ல...

    ReplyDelete
  2. இந்த நேரத்தின் இத்தனை சிரமமெடுத்து பின்னூட்டியதற்கு நன்றி....

    அவர்கள் எழுதியதுதான் புரியவில்லை, உங்களை மாதிரியானவர்கள் அனைவருக்கும் புரியும் வகையில் எழுதி வைக்க வேண்டுமென்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பும், ஆதங்கமும். அதற்காகத்தானிந்த பதிவும்.

    நீங்கள் எழுதி பொதுவில் வையுங்கள், நாங்கள் அதை விவாதித்து நடைமுறைக்கு சாத்தியாமனதுதான என தீர்மானிக்கிறோம். அல்லது பயன் படுத்துகிறோம்...


    //யோககற்பம் எல்லாம் குரு இன்றி செய்ய முடியாது செய்தால் செய்பவர் சித்தாப் பிரமை பிடித்தவராக மாறும் அபாயம் உண்டு..//

    இனி நான் சித்த பிரமை பிடித்தவர்களை பார்க்கும் போதெல்லாம் உங்களின் இந்த வரி நினைவுக்கு வந்து என்னை தொல்லை பண்ணும்.

    ReplyDelete
  3. ///குருவின் உத்தரவு இல்லாமல் இவற்றை எவருக்கும் சொல்லக் கூடாது, தகுந்த குருவின் மேற்பார்வையில்லாமல் இவற்றை செய்தால் பலிக்காது என்றெல்லாம் கூறி, பாடல்களின் ரகசியம் காக்கப் படுதல் என்பதன் பின்னனியில் இவர்களின் குறுகிய சுயநலத் தன்மையே மேலோங்கி இருப்பதாக சந்தேகங்கள் எனக்கு உண்டு.////


    கற்றுக்கொண்ட வித்தையை காசாக்க முனைபவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் இருக்கிறார்கள்..!
    உங்களுக்கு அவர்கள்மேல் கோபமும் சந்தேகங்களும் ஏற்படுவதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை ..!;;;;)

    மேலும் , அந்த சித்தர்கள் பற்றிய வலைத்தளம் ஒரு மிரட்சியை ஏற்படுத்துகிறது...!

    ReplyDelete
  4. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  5. அனைவருக்கும் முழுதும் தெரிந்தால், நிறைய அரைவேக்காடு சித்தமருத்துவர்கள் வரக்கூடும் என்ற கணிப்பில்
    கூட இது ரகசியமாக பாதுகாக்கபட்டிருக்கும்.இதில் பாதிப்பு உடல் சார்ந்தது எனவே சித்தர்கள் தொலை நோக்குப்பார்வை
    சரியானதாக இருக்கத்தான் இருக்க வாய்ப்பு அதிகம் ......இது என்பார்வை ....நன்றி

    ReplyDelete