Wednesday, February 24, 2010

வாழ்த்த வயதுதான் வேண்டுமா ?

நேற்றைக்கு இங்கே திரும்பிய பக்கமெல்லாம் அம்மாவை வாழ்த்தி மண்ணிக்கவும் வணங்கி போஸ்ட்டர்கள், ப்ளக்ஸ். எல்லாம் அம்மாவுக்கு அறுபத்தி இரண்டு வயதான கொண்டாட்டம்தான்.அம்மாவை போற்றிய அதியற்புதமான ஆராதனைகள் மற்றும் ஸ்தோத்திரங்களுடன் கீழே, வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம் என சொல்லி வைத்த மாதிரி எல்லோரும் போட்டிருந்தனர்.

இந்த எதுகை மோனை வாசகத்தை எந்த புண்ணியவான் உருவாக்கினாரோ தெரியவில்லை. ஈயடிச்சான் காப்பியாக அத்தனை பேரும் பயன்படுத்துகிறார்கள்.உண்மையில் ஒருவரை வாழ்த்த என்ன தகுதி வேண்டும் நெகிழ்ந்த மனதுதானே வேண்டும். வயதுக்கும், வாழ்த்துக்கும் எதேனும் தொடர்பு இருக்கிறதா.

ஒருவரை தினம்தோறும், எவரும் வாழ்த்திக் கொண்டே இருக்கப் போவதில்லை, அல்லது தினமும் அதற்கான காரண காரியங்களுக்கும் வாய்ப்பில்லை. அப்படி இருக்க ஏதோ ஒரு நாளில் வாழ்த்த வேண்டிய சந்தர்ப்பத்தில் கூட இவர்கள் வணங்குவதாய் போஸ்ட்டர் அடிப்பதன் மூலம், அன்றைக்கு மட்டும்தான் வணங்குவார்கள் மற்ற நாட்களில் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்பது மாதிரியான கள்ளத்தனம் வந்து விடுகிறதல்லவா!

புத்தாண்டு மாதிரியான கொண்டாட்ட காலங்களில், வயதைப் பார்த்தா ஒவ்வொருவரும் வாழ்த்தும், வணக்கமும் சொல்லுகிறார்கள்.

திராவிட இயக்கத்தின் காக்காய் மற்றும் காலில் விழும் கலாச்சாரத்தில் அவமானகரமான எச்சமாகவே எனக்கு இந்த வாசகம் தோன்றுகிறது.

”அம்மா”விற்கு எனது தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Tuesday, February 23, 2010

ரொம்ப நாளாய் தேடிய பாடல்...!



சமீபத்தில் வெளியான 'மாயாண்டி குடும்பத்தார்' படத்தில் வரும் ஒரு முதலிரவு காட்சியில் பிண்ணனியில் ஒலித்த பாடல் இது. கேட்ட மாத்திரத்தில் ரசிகனாய் போனேன். இனையம் முழுதும் தேடிக் களைத்தும் கிடைக்காத இந்த பாடல் சற்று முன்னர் தானாய் வந்து சிக்க....ஒரே இன்ப அதிர்ச்சி!

மச்சமே உடம்பாய் பிறந்தவர் தலைவர்தான்! கொடுத்து வச்ச மகராசன், ராதா சலூசாவை ஒரு வழியாக்கி விடுகிறார். ம்ம்ம்ம்...நமக்கு அது முக்கியம் இல்லை....பாடல் வரிகளை கவனியுங்கள் எத்தனை எளிமையான வார்த்தைகள், வருடும் மெட்டமைப்பு....

ஆனந்த பாடத்தின் அரிச்சுவடி
ஆரம்பமாகட்டும் அனைத்த படி
தேன் அள்ளி பூமுத்தம் தெளித்த படி
எனை தழுவட்டுமே தினம் இந்த பருவக் கொடி!

இதுதான் ரொமான்ஸ்...

கேட்டு மகிழுங்கள்....பார்த்தால் வயிற்றெரிச்சல் வரும்!

கேட்டதில் பிடித்தது....!



கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம்

கண்டவுடன் காதல் நெஞ்சில் கொண்டது பாவம்

கொண்டவுடன் பிரிவை சொல்லி வந்தது பாவம்

வெறும் கூடாக பூமியில் வாழ்ந்தென்ன லாபம்!

Sunday, February 21, 2010

ப்ளாஸ்டிக் புன்னகையும், நித்யானந்த அனுபவமும்

கடந்த வார இறுதியின் அனுபவம்/அவஸ்தையை பற்றி கொஞ்சம் பிரஸ்தாபிக்கலாம் என்று இந்த பதிவு !

எனது நினைவாற்றல் குறித்தான கவலை அவ்வப்போது வருவதுண்டு.எதைக் கொட்டினாலும் தங்குவதில்லை, 'நிறைகுடம்' நானென பெருமையடித்துக் கொள்ளலாம். சமீபத்தில் சாரு நிவேதிதாவின் பதிவில் ஸ்ரீ நித்யானந்தரின் அதீத நினைவாற்றல் பயிற்சி என ஒரு விளம்பர பதிவிட்டிருந்தார்.

சமீப நாட்களில் சாருவின் பதிவுகளில் இம்மாதிரியான நித்யா புராணம் படித்து கிளர்ச்சி அடைந்தவர்களில் நானும் ஒருவன்.நித்யானந்தரின் பல யூட்யூப் க்ளிப்பிங்குகள் வேறு, இந்த ஆளிடம் ஏதோ சரக்கு இருக்கிறது என எண்ண வைத்திருந்தன.

நித்யானந்தரை நேரில் பார்க்க ஒரு வாய்ப்பு அத்தோடு, நான் அதீத நினைவாற்றல் பெற்றவனாகி விடும் சாத்தியம் வேறு கைகூடி வருகிறது! என்னே ஒரு பாக்கியம்! தொலை பேசினேன்.....

நித்யானந்தம்! , யார் மூலமா தெரிஞ்சிகிட்டீங்க?

எழுத்தாளர் சாரு நிவேதிதாவோட சைட்ல போட்ருந்தாரு !

அவசியம் வாங்க, வரும் போது உங்களுக்கு தெரிஞ்சவங்களையும் கூட்டீட்டு வாங்க!

நித்யானந்தர் க்ளாஸ் எடுப்பாரா? ஃபீஸ் எவ்வளவு ஆகும்?

மஹராஜ்தான் க்ளாஸ் எடுப்பார், எழுநூற்றி அய்ம்பது ஆகும்.

ம்ம்ம்ம்....எத்தனை மணிக்கு அங்க இருக்கனும்?

காலை எட்டு மணிக்கெல்லாம் வந்துருங்க, ஆன் த ஸ்பாட் ரிஜிஸ்ட்ரேஷன்.பதின்மூன்று வயசுக்கு மேல உள்ளவங்களுக்கு மட்டும்தான் அனுமதி.

ரொம்ப தேங்க்ஸ்ங்க, வந்துர்றேன்....

நித்யானந்தம்....


சனிக்கிழமை காலை எட்டு மணி, என்னுடைய நினைவாற்றலை பல மடங்கு அதிகரிக்கும் பேராசையில், வீட்டில் அனைவரின் கேலியையும் பொருட்படுத்தாத கர்ம வீரனாய் ஹோட்டல் காஞ்சியில் காலடி வைத்தேன். வலது புறம் இருந்த கல்யாண மஹால் போன்றதொரு பகுதியில், எழும்பூர் மற்றும் மயிலாப்பூர் நித்யானந்த சபைகள் ஃப்ளெக்ஸ் மூலமாய் வரவேற்றனர்.

சிவந்த மேனியராய், வெள்ளுடையில் ஆண்களும், பெண்களும் ...... வாலண்டியர்களாம்!, ஒரு விண்ணப்பதைக் கொடுத்து பூர்த்தி செய்ய சொன்னார்கள், கர்ம சிரத்தையாய் செய்தேன். என் பெயரை நித்யானந்தர் மாற்றிட விருப்பமா என்று கேட்டிருந்தனர். சற்றே யோசித்தேன்! ,ஏதாவது ஒரு பாடாவதி பெயரை அவர் வைக்கப் போய், அந்த ராசியில் நான் அடுத்த அவதார புருஷனாகி விட்டால்....நினைக்கவே பீதியாக இருந்தது.

என்னோடு விண்ணப்பம் பூர்த்தி செய்தவர்களில் பெரும்பாலானவர்கள், 'அவா' வாகவே இருந்தனர். எல்லாவற்றிலும் முந்திக் கொள்ளும் அவர்களின் விழிப்புணர்வு குறித்து பொறாமையாகவே இருந்தது. ஸ்பீக்கரில் நித்யானந்தரை வானுக்கும், மண்ணுக்குமாய், ஆண்டவரே!..தாண்டவரே! என நாட்டுப் புற மெட்டுக்களில் போட்டு தாக்கிக் கொண்டிருந்தனர்.

அங்கிருந்தவர்களின் ‘நேக்கு','நோக்கு' சம்பாஷைனகளில் எரிச்சலாகி எத்தனை மணிக்குத்தான் துவங்குவீர்கள் என கேட்டேன். பத்து மணிக்கு என ஈவிரக்கமில்லாமல் சொன்னார்கள். எட்டு மணிக்கே எதுக்கு வர சொன்னீங்க என்கிற என் கேள்விக்கு , எட்டு மணியில் இருந்து ரிஜிஸ்ட்ரேசன்னு சொல்லீருப்பாங்க என அசராமல் பதில் வந்தது. என் நினைவாற்றலின் மீதிருந்த நம்பிக்கையினால், அவர்களின் பதில் கோவத்தை தரவில்லை, எரிச்சல் தான் மண்டியது.

இந்த இடத்தில் ஹோட்டல் காஞ்சியை பற்றி சில வார்த்தைகள் ....... நகரின் இதயப் பகுதியில், கால ஒட்டத்தின் கவனிப்பு போதாமல் அழுக்காய் இருக்கும் மூன்று நட்சத்திர(!) ஹோட்டல். பணியாளர்களுக்கு கலர்கலராய் சீருடைகள் ,ஆனால் வருடத்திற்கு ஒரு முறைதான் வாஷிங் அலவன்ஸ் தருவார்கள் போலிருக்கிறது.

அழுது வடிகிறது ரெஸ்ட்டாரண்ட்...... பொங்கல்,வடை கேட்டேன்!, காபி குடிக்கும் சாசரில் பொங்கலை வைத்து அதன் தலையில் ஒரு ஸ்பூன் குத்தி, வடை ஓரத்தில் தொற்றிக் கொண்டு வந்தது. சரி சாப்பிட தட்டு தருவார்கள் என காத்திருந்தேன்.... காத்திருதேன்...., பொறுமையிழந்து ஒரு தட்டு கொடுக்கச் சொல்லி கேட்டால் சர்வர் நான் ஜோக்கடிப்பதாய் நினைத்து சிரித்துக் கொண்டே, இங்க இப்படித்தான் தர்றது என அலட்சியமாய் சொல்ல.....கடுப்பேறியது. அந்த அதிகாலை நேரத்தில் எனக்குள் இருந்த மிருகம் தூங்கிக் கொண்டிருந்த படியால் அவர் தப்பினார். காஃபி நன்றாக இருந்தது. அறுபத்தி ஐந்து ரூபாய் மொய்ய்ய்ய்ய்...

ஒரு வழியாய் கல்யாண மஹாலில் நுழைந்தேன்.....வாசலில் குறிப்பெடுக்க ஒரு நோட்டும், பேனாவும் கூடவே ஒரு முழ நீளத்தில் ஒரு துணியும் கொடுத்தார்கள். எதற்கென்று புரியவில்லை. சம்பந்தமே இல்லாமல் கோவனமும் அது தொடர்ச்சியான எண்ணங்களும் கிலியேற்படுத்த ஆனது ஆகட்டும் என உள்ளே நுழைந்தேன்.


மேடையில் ஒரு சிம்மசனம் போட்டிருந்தார்கள். அதில் நித்யானந்தரின் பெரிய படம் வைத்திருந்தார்கள். அதற்கு கீழே காவித் துணி போர்த்திய இன்னொரு சிம்மாசனம். லேசாக பொறி தட்டியது, மஹராஜ்தான் நடத்துவார்னு சொன்னாங்களே....அப்ப நித்யானந்தர் மஹராஜ் இல்லையா?

தொடரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......


கேட்டதில் பிடித்தது.....

நான் கவிஞன் இல்லை...

ஆனால் !

Tuesday, February 16, 2010

சென்னையின் மொழி !

ஏன் இப்படியான பதிவினை எழுத நேரிட்டது?

பின் கதை கொஞ்சம்.....

கடந்த பதிவின் பின்னூட்டத்தில், சகபதிவர் ஒருவர் 'டவுசர் பாண்டி' என்கிற பெயரில் பதிவெழுதுவதாய் தெரிய வந்தது. இத்தனை நாளாய் அவர் என் கண்களிலோ, அல்லது நான் அவர் பார்வையிலோ வராமல் போனது தற்செயலானது என்றே நம்புவோம்.என்னுடைய பதிவின் முகவரி கூட http://tavusarpandi.blogspot.com .தான் மட்டுமே டவுசர் என நினைத்திருந்தவர் ரொம்பவும் கவலையாகி விட்டார். அவருக்கு நிம்மதி தரும் வார்த்தைகளை பின்னூட்டத்திலும் பின்னர் அவரின் பதிவிலும் சொல்லி விட்டேன்.

அவரின் பதிவினை மேய்ந்த போதுதான், இப்படியான ஒரு பதிவினை எழுதிட தீர்மானித்தேன். எனது பதினாலு வருட சென்னை வாழ்க்கையின் அனுபவத்தை முன் வைத்து சென்னையின் மொழியின் ஊடான எனது பயணத்தையும், பார்வைகளையும் பதிந்து வைப்பது அவசியமென படுகிறது. மற்றபடி யாரையும் விமர்சிக்கும் நோக்கமில்லை.

பொதுவில் சென்னையின் மொழி என்றவுடன் அடையாளம் காட்டப் படுவது, அல்லது நமது நினைவடுக்குகளில் பதிய வைக்கப் பட்டிருப்பது, மனோரமாவும், தேங்காய் சீனிவாசனும், லூஸ் மோகனும் பேசிய மிகைப் படுத்திய நாடகத் தமிழ்தான். நிதர்சனத்தில் அத்தனை கேவலமாய் இங்கே யாரும் மொழியாடுவதில்லை. மேட்டுக்குடி வசனகர்த்தாக்கள் தனக்கும் கீழ் நிலை மனிதன் மீது திணித்த ஒரு அடையாளம்தான் மெட்ராஸ் பாஷை.

உண்மையில் சென்னைத் தமிழ் என்பது மூன்று அடுக்குகளால் ஆனது. சென்னையின் மேல்தட்டு வர்க்கம் இந்தியா முழுமையாக இருந்து வந்த குடியேறிகளினால் உருவானது. பெரும் செல்வந்தர்களும், தொழில் முனைவோரும் இதில் அடங்குவர். என் அனுபவத்தில் சென்னையின் பூர்வகுடிகள் யாரும் இந்த மேல்தட்டில் இருப்பதாய் தெரியவில்லை. தொழில் மற்றும் இங்கிருக்கும் வசதி வாய்ப்புகளை மட்டுமே முன்வைத்தும் குடியேறியவர்கள் இவர்கள்.

இவர்கள் தங்களின் பணியாட்கள் அல்லது பொருளாதாரத்தில் கீழே இருப்பவர்களுடன் தொடர்பு கொள்ள மட்டுமே தமிழை உபயோகிக்கிறவர்கள் . இது பிழைப்புவாதம் மற்றும் அதிகாரவர்க்கத்தின் அலட்சிய தமிழாகவே இருக்கிறது. தமிழை மென்று தின்னும் புண்ணியவான்கள்.அண்டை மாநிலத்தவர்கள் இம்மாதிரி தமிழை கையாளுவதைக் கூட ஒருவகையில் நியாயப் படுத்தி விடமுடியும். ஆனால் பிறப்பால் தமிழர்களானவர்களே தாய்மொழிக்கான இழிவை தரத் தயங்குவதில்லை. இவர்களின் தற்போதைய தலை முறையினருக்கு தமிழை வாசிக்க கூட தெரியாது என்பதுதான் நிதர்சனம்.

இரண்டாம் அடுக்கில் இருப்பவர்கள், நடுத்தர வர்க்கம் எனப்படும் வேலைக்குச் சென்று பொருளீட்டுபவர்கள். இவர்கள் மாநிலம் முழுவதும் இருந்து குடியேறியவர்கள். இவர்கள்தான் சென்னையின் மொழியில் பிரதான பங்கு வகிப்பவர்கள். கலைத் துறை, அரசியல்,அரசாங்க பணி, தனியார் நிறுவன பணிகள் என எங்கும் வியாபித்திருப்பவர்கள். தங்கள் வேரின் மொழியினை சென்னையின் தமிழோடு கலக்க விடாத பிடிவாதத்துடன் இருப்பவர்கள். மதுரையோ, திருநெல்வேலியோ,கொங்குதமிழோ.....அதன் இயல்பும் அழகும் மாறாமல் தமிழாடுபவர்கள் இவர்களே.

மூன்றாம் அடுக்கில் இருப்பவர்களின் மொழிதான் சென்னையின் மொழியாய் அடையாளம் காட்டப் படுகிறது. நான் பார்த்தவரையில் இவர்கள் சிறுபான்மையினர். வடசென்னை பகுதியில்தான் இம்மதிரியான மொழிநடை பயன்பாட்டில் இருக்கிறது. பொருளாதார ரீதியாக பின் தங்கிய மீனவர்கள், தொழிளாளர்கள்,ஆட்டோ மற்றும் ரிக்‌ஷா ஓட்டுனர்கள், அன்றாட தினக்கூலி செய்வோர் என எளிதில் இவர்களை வகைப் படுத்திடலாம்.

முறையான கல்வியோ, அல்லது மொழி அறிவோ கிடைத்திட வாய்ப்பற்ற ஒரு பாமரனின் முயற்சியாகவே இந்த பேச்சுத் தமிழைச் சொல்லுவேன். எந்த விதமான வரையறைகளோ, நிர்பந்தங்களோ இல்லாது ஒருவரின் கற்பனை மற்றும் தேவைக்கேற்ப வளர்த்துக் கொள்ளும் லாகவம் இதில் இருக்கிறது. ஓரம் கத்தரிக்கப் பட்ட ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி வார்த்தைகளின் கலவையான மொழி. அலங்காரமோ, தொடர்பு வார்த்தைகளோ இல்லாத காரியவாதியின் மொழிநடை இது.

பதிவின் நீளம் கருதி வரும் நாட்களில் இதை தொடராய் தொடர்கிறேன்....

Saturday, February 13, 2010

பதின்ம வயதின் படிமங்கள்....!

பிரபல பதிவரும், நண்பருமான ஜீவன் அவர்கள், பதின்ம நினைவுகளை பகிர அழைத்திருக்கும் ஒரே ஆண் பதிவர் நான் மட்டுமே என்கிற பெருமையை தக்கவைத்துக் கொள்ளவே இந்த உடனடி பதிவு.....ஹா...ஹா...ஹா...

பாசாங்குகள் இல்லாத எனது பதின்ம வயதுகள் மூன்று பகுதியாய், தொடர்பே இல்லாத கொண்டாட்டங்களின் காலம்.

ஆறில் இருந்து பத்தாம் வகுப்பு வரையிலான கூட்டுப்புழு காலம்...

ப்ளஸ் 1, ப்ளஸ் 2 என்கிற இருதலை கொள்ளி காலம்....

கல்லூரியின் காட்டாற்று காலம்.....

ஆறாம் வகுப்பு ....முதல் நாள் வகுப்புக்கு போய்க்கொண்டிருந்த போது, என்னைக் கடந்து ஓடிய ஒருத்தன் , ”நம்ம க்ளாசுக்கு புதுசா ஒருத்தன் வர்றாண்டா” என கூச்சலாய் கட்டியங் கூறியதை, பதின்ம வயதுக்குள் எனது நுழைவின் குறியீடாக இன்னமும் நினைவில் வைத்திருக்கிறேன்..

ஆகக் கடுமையான ஒழுங்குகளை திணிக்கும் அம்மா, அத்தனை எளிதில் நெருங்க முடியாத பரபரப்பில் அப்பா....ஜெயிலில் இருந்து கோர்ட்டுக்கு போகும் விசாரனை கைதிகள் மாதிரி தினமும் பள்ளிக்கு அழைத்துச் சென்று வரும் வேலையாட்கள். அத்தனை சுவாரசியமானதாக இருக்கவில்லை துவக்க நாட்கள்.ஹிந்தி பண்டிட் ஒருவர் தினமும் வீட்டுக்கு வந்து எங்களுக்கு ப்ராத்மிக்கில் இருந்து ஆரம்பித்தார்.நான் விஷாரத்தில் போய் முடித்தேன்.

ஒன்பதாம் வகுப்பிற்கு வந்த போது நிறைய சினிமா ஃபிலிம் ரோல்களை சேகரிக்க ஆரம்பித்திருந்தேன். கருப்பு வெள்ளையில் இருந்து கலர்படம் வரையிலான துண்டு துண்டான பிலிம் ரோல்கள்... அதே மாதிரி சினிமா பாட்டு புத்தகங்கள்.அப்போதைக்கு என்னுடைய நெருக்கமான நண்பன் என்றால் அது இலங்கை வானொலியைச் சொல்லலாம்.கிரிக்கெட் விளையாடவும் வீட்டில் அனுமதி கிடைத்திருந்தது.....

பத்தாம் வகுப்பில்தான் ட்யூசன் ரூபத்தில் பெண்களின் அருகாமை கிடைத்தது.தடிப் பயல்களாய் காலம் கடத்திக் கொண்டிருந்த எங்களுக்கு இதெல்லாம் புதியதாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருந்தது. பெண்கள் எல்லாரும் லட்சணமாய், கலர்கலரான தாவனிகளில் பவுடர் பூச்சு குங்குமத்தோடு, நெஞ்சனைத்த புத்தங்களுடன் வர , நாங்கள் கிரிக்கெட் விளையாடிய கையோடு வேர்க்க விறுவிறுக்க போவோம்.

ஒரு நாள் சுந்தர் சொன்ன பிறகுதான் ட்யூசனுக்கு டவுசர் போட்டுக் கொண்டு போவதன் அபத்தம் பிடிபட்டது. மற்ற பையன்கள் வீட்டுக்குப் போய்,பேண்ட் போட்டுக் கொண்டு ஜம்மென வரும் போது எங்களின் யூனிபார்ம் டவுசர்களினால் நாங்கள் சிறுவர்களாய் பார்க்கப் படுவதாய் நினைக்க ஆரம்பித்தோம் .அப்போதைக்கு கிரிக்கெட்தான் வாழ்க்கையாய் இருந்ததால் பெண்களுக்காய் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.

அரையாண்டு தேர்வு சமயத்தில் நான் விஷாரத் பூர்வார்த் முடித்து விட்டேன். அந்த வயதில் இது பெரிய விசயம். நான் ஹிந்தி பண்டிட் ஆன விசயம் எப்படியோ ட்யூசன் வாத்தியாருக்குத் தெரிய, ஒரு நாள் அவர் எல்லார் மத்தியிலும் சொல்லி, மேன் ஆஃப் தெ மேட்ச் வாங்குகிற சச்சின் டெண்டுல்கர் மாதிரி கூச்சமாய் வெட்கத்தோடு நின்று கொண்டிருந்தேன். அத்தனை பெண்களும் என்னை ஆச்சர்யத்துடன் பார்ப்பதும், கைதட்டியதும் இனம் தெரியாத மகிழ்ச்சியையும், அதை தக்க வைக்க வேண்டுமென்கிற நினைப்பையும் கொடுத்தது. அநேகமாய் இந்த காலகட்டத்தில்தான் நான் வயதுக்கு வந்திருக்க வேண்டும்.

ப்ளஸொன், முதல் க்ரூப். . . .வேலையாட்கள் இல்லாமல் முதல்முறையாக பஸ்ஸில் பள்ளிக்கு செல்ல அனுமதி கிடைத்தது. இதைக் கொண்டாடத் தெரியாத மக்காகவே இருந்தேன். புதூரில் இருந்து செயிண்ட் மேரீஸுக்கு 2B பேருந்து....வழக்கமாய் மற்றவர்கள் போகும் நேரத்திற்கு முந்தைய காலியான பஸ்ஸின் சன்னலோர பயணமே பிடித்திருந்தது. யாருமில்லாத வகுப்பறையில் புத்தக கட்டை எறிந்து விட்டு, பள்ளியின் வளாகத்துள் இருந்த பிரம்மாண்டமான செயிண்ட் மேரி சர்ச்சில் பாவமண்ணிப்பு கேட்பவர்களை வேடிக்கை பார்ப்பதில் முதல் வருடம் கழிந்தது.

ப்ளஸ் 2 துவக்கம், மறுபடியும் ட்யூசன், காலை ஆறு மணிக்கெல்லாம் போயாக வேண்டும். சைக்கிளில் செல்லவும் அனுமதிக்கப் பட்டேன்.இந்த கட்டத்தில் ராதாகிருஷ்ணன் நெருங்கிய நண்பனான். பெண்கள் விஷயத்தில் நான் கிண்ட்டர் கார்டன் நிலையில் இருந்தேன் என்றால் ராதா இளங்கலை முதலாம் ஆண்டில் இருந்தான்.யாரெல்லாம் லவ் பண்றாங்க, அதை எப்படி கண்டுபிடிப்பது, ஒரு பொண்ணு நின்னா என்ன அர்த்தம், நடந்தா என்ன அர்த்தம் பார்த்தா என்ன அர்த்தம்னு உற்சாகமாய் பாடம் சொல்ல, ட்யூசனை விட இதில் ஆர்வம் பெருகியிருந்தது. இந்த வகையில் ராதாதான் என் முதலும் கடைசியுமான குரு....

ஒரு நாள் ராதா, மாப்ளே! உங்க ஏரியால இருந்து ரெண்டு புள்ளைங்க செயிண்ட் ஜோசப் வர்றாளுங்கடா! யார்னு தெரியுமாடா? என கேட்க ரொம்பவும் அவமானமாய் போய்விட்டது. என் ஏரியாவில் இருந்து வரும் பெண்களை எனக்குத் தெரியவில்லை, கொதித்தெழுந்ததன் பலன் ... அதன் பின்னதான கதைகளை எனது பூர்வாசிரம பதிவுகளில் எழுதியிருப்பதால் தேடிப் பிடித்து படித்துக்கொள்ளுங்கள்.

அம்மாவின் அதிரடியான நெறிபடுத்துதலின் பயனாய், எனக்கு மருத்துவம், பொறியியல், விவசாயம் என மூன்றிலும் இடம் கிடைக்க, அம்மா பொறியியலை தேர்ந்தெடுக்க.., இதன் பிறகு அம்மா என்கிற ராக்கெட்டில் இருந்து பிரிந்த வின்கலமானேன், எனக்கான வட்டப் பாதைகளை நானே தீர்மானிப்பதென தீர்மானித்ததும் இங்கேதான். இதன் பிறகான வாழ்க்கையை பழைய நாட்களுடன் ஒப்பிடுகையில் அம்மாவின் மகத்துவம் இப்போது புரிகிறது.

”ஒரு ப்ரொஃபசனல் கோர்ஸ் போன பிறகு உன் இஷ்டத்துக்கு என்ன வேணும்னாலும் பண்ணிக்க, உன்னை யார் கேட்க போறா!” இது அம்மா எனக்கு நீட்டிய கேரட். . . .

ஆக, இப்போது மனதளவில் பழைய கட்டுப் பாடுகளில் இருந்து விட்டு விடுதலையாகி இருந்தேன். படிப்பதை தவிர வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்றே புத்தியும் செயலும் ஓடியது. கையில் தேவைக்கு அதிகமான காசு, புத்தம் புதிதாய் ஒரு கைனட்டிக் ஹோண்டா, புதிதாய் நண்பர்கள்.....தேடல் துவங்கியது.

கிரிக்கெட்,சினிமா,மலையாள பிட்டு படங்கள், நண்பனின் வீட்டில் நீலப்படங்கள் பார்ப்பது, ஒரு ஹோட்டல் விடாமல் படையெடுத்தது,வாரம் ஒரு தடவையாவது கொடைக்கானலில் போய் சுற்றி வருவது, மிக சந்தோஷமான நாட்கள் அவை....தண்ணியும், தம்மும் எனக்கு பிடிக்காததனால் தப்பியது அல்லது தப்பினேன். பரிசோதனைக் கூடத்து எலியைப் போல வாழ்க்கையின் கூறுகளை அலசிய காலம் அது.எல்லைகள் தாண்டுவதில் தயக்கமோ அல்லது பயமோ இருந்திருக்கலாம். அதனால் பெரிதாய் சேதாரம் இல்லாமல் இயல்பானவனாகவே இருந்தேன்.

கிரிக்கெட்டில் நான் அருமையான லெக் ஸ்பின்னர், எந்தவொரு பேட்ஸ்மேனையும் ஐந்திலிருந்து ஆறு பந்துகளுக்குள் தவறு செய்ய வைக்கும் திறமை இருந்தது. கொஞ்சம் முனைப்பு காட்டியிருந்தால் இன்னேரம் நீங்கள் என்னை மைதானத்திலும், விளம்பரஙகளிலும் பார்த்து தொலைத்திருப்பீர்கள்....உங்களின் பூர்வ ஜென்ம புண்ணியம் தப்பித்தீர்கள். நூறு மதிப்பெண்களுக்கு படித்த காலம் போய் பாஸ் மார்க்கை குறிவைத்து படிக்க ஆரம்பித்திருந்தேன். சமயஙகளில் வெற்றியும் கிடைத்தது. அரியர்களுக்கு அஞ்சாநெஞ்சனாய் காலம் என்னை மாற்றியிருந்தது.

பெண்கள், தோழிகள்,காதலிகளை பற்றி தனியேதான் எழுத வேண்டும். அந்த நாட்களில் நான் முழு நேர காதலனாகவே இருந்தேன்.யாரகிலும் ஒருத்தி என்னுடைய நினைவுகளில் தொடர்ச்சியாய் வசித்திருந்தார்கள்.பல நேரங்களில் ஒருதலையாகவும், சில சமயங்களில் இருதலையாகவும்.... என் அருகாமையை அவர்கள் விரும்பினார்கள் அல்லது நான் அதை தக்க வைப்பதிற்காக உழைத்தேன் என்றும் சொல்லலாம். உனக்கான அன்பும், அக்கறையும்,நேரமும் என்னிடத்தில் எப்போதும் இருக்கிறது என்பதை புரிய வைத்தலே என் காதலின் வரையறைகளாய் இருந்தன.

கல்லூரியின் நான்காம் வருடம் பதின்ம வயதில் வராதாகையால்...முடிவாய் சில எண்ணங்கள். வாழ்க்கையை அதன் போக்கில் போக விட்டு ரசிப்பது என்பது இந்த பருவத்தில் மட்டுமே சாத்தியமாகிறது என நினைக்கிறேன். கல்வி மட்டுமே என்கிற கால கட்டாயத்தில், அதைத் தாண்டிய உலகம் மீதான ஈர்ப்பும், அதை புரிந்து கொள்வதற்கான குருட்டு தைரியமும், திருட்டுத் தனங்களுமே அந்த நினைவுகளை இன்றைக்கும் சுவாரசியமானதாக தக்க வைத்திருக்கிறது என நினைக்கிறேன்.

நேற்றைக்கு எப்படியிருந்தேன் என்பதோ, நாளைக்கு எப்படியிருப்பேன் என்பதோ முக்கியமில்லை....இன்றைக்கு நான் என் சுற்றத்தின் விருப்பத்திற்குறியவனாய் இருக்கிறேனா என்பதே என் வரையில் முக்கியம். அதற்கான முயற்சியே என் வாழ்க்கை !

இது தொடர் பதிவாகையால் நான் ரசிக்கும், விரும்பும், மதிக்கும்...இப்படி ஏகப்பட்ட பில்ட்டப்புகளை தக்க வைத்திருக்கும் மங்கை, காட்டாறு இருவரையும் அழைத்திட விரும்புகிறேன்.

இருவரும் மூத்த அல்லது வயதான பதிவர்கள் என்பதால் இந்த அழைப்பினை ஏற்கும் அல்லது நிராகரிக்கும் உரிமையினை அவர்களிடமே விட்டு விடுகிறேன் ....ஹி...ஹி...



அஞ்சலி !

என்னை கடந்து போன காதலிகளுக்கும்....

அதில் கரைந்து போன காதல்களுக்கும் ....

Thursday, February 11, 2010

கேட்டதில் பிடித்தது...!



When your down and troubled
And you need a helping hand
And nothing, whoa nothing is going right.
Close your eyes and think of me
And soon I will be there
To brighten up even your darkest nights.
You just call out my name,
And you know whereever I am
I'll come running, oh yeah baby
To see you again.
Winter, spring , summer, or fall,
All you have to do is call
And I'll be there, yeah, yeah, yeah.
You've got a freind.
If the sky above you
Should turn dark and full of clouds
And that old north wind should begin to blow
Keep your head together and call my name out loud
And soon I will be knocking upon your door.
You just call out my name and you know where ever I am
I'll come running to see you again.
Winter, Spring, summer or fall
All you got to do is call
And I'll be there, yeah, yeah, yeah.
Hey, ain't it good to know that you've got a friend?
People can be so cold.
They'll hurt you and desert you.
Well they'll take your soul if you let them.
Oh yeah, but don't you let them.
You just call out my name and you know wherever I am
I'll come running to see you again.
Oh babe, don't you know that,
Winter Spring summer or fall,
Hey now, all you've got to do is call.
Lord, I'll be there, yes I will.
You've got a friend.
You've got a friend.
Ain't it good to know you've got a friend.
Ain't it good to know you've got a friend.
You've got a friend.

இனியும் எழுதுவேன். . . .

அநே(னே)கமாய் தினமும் பதிவெழுதும் தமிழ் பதிவன் நானாகத்தான் இருக்க முடியும்.ஆனால் இந்த பதிவில் எழுதாததன் சூன்யம் நிரம்பிக் கிடக்கிறது..வாசிப்புக்கு எழுதியதை தாண்டி, வசீகர எழுத்தின் நுட்பம் பழகவே இந்த பதிவு என்கிற குறிக்கோள் இப்போது தூசியும் துருவும் பிடித்து போய் கிடக்கிறது.

நான் தினமும் எழுதுகிற எழுத்தில் உயிர் இல்லையென்பது இப்போதுதான் உறைத்திருக்கிறது. கலைத்துப் போட்ட சில வாக்கியங்களை முன்னும் பின்னும் நகர்த்தி அடுக்குவதைப் போலத்தானிருக்கிறது அந்த நுட்ப பதிவுகள். ஆயிரம் பேருக்கும் குறையாமல் வாசிக்கிற நிர்பந்தமும், கிடைத்திருக்கிற ஒளிவட்டத்தை தக்கவைக்கும் பேராசையாலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்....அங்கே!

தொலைந்து போன நாட்களை நினைத்துப் புலம்புக்கொண்டிருக்கிற நேரத்தில் எதையாவது எழுதித் துவக்குவோம் என்றே இந்த பதிவினை மீள ஆரம்பித்திருக்கிறேன். தமிழ் பதிவுலகம் நிறையவே மாறிவிட்டது.....சுண்டைக்காய் முதல் சுடலைமாடசாமி வரை பிரித்து மேய்கிறார்கள்.

தமிழ்மணம் பக்கம் போய் மாதக் கணக்குகள் ஆகி விட்டது. மதியாதார் தலைவாசல். . . .

விண்ணை தாண்டி வருவாயா !, கௌதம் வாசுதேவன் மேனனின் படம். எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருக்கின்றன ரஹ்மானின் இசை. . . .இதில் எனக்கொரு நெருடல். Pink Floyd ன் Wish you were here... பாடலின் படிமத்தில் ஒத்தியெடுத்தாற் போல ஒரு பாட்டை ரஹ்மான் தந்திருக்கிறார். கீழே இரண்டு பாடல்களையும் தந்திருக்கிறேன்...நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

WISH U WERE HERE...


நம்ம ரஹ்மானின் ஆரோமளே...

இதை ஈயடிச்சான் காப்பி என்று சொல்ல முடியாவிட்டாலும், பாதிப்புகள் இருப்பதை மறைக்க முடியாது. என் மாதிரியான ஆட்களே கண்டு பிடித்து விட முடிகிற அபத்தம். ரகுமானுக்கே வெளிச்சம். . . .

எல்லோரும் ட்விட்டர்..ட்விட்டர் என உருகி மருகிக் கொண்டிருந்த போது, பஃப்ளிக் டாய்லெட் சுவரில் எழுதுகிற சாமாச்சாரமாய் நினைத்து, பெரிதாய் ஆர்வம் இல்லாமல் இருந்தேன். சமீபத்தில் யாகூ சாட்டில் மல்லுக் கட்டிக் கொண்டிருப்பதற்கு மாற்றாய் இருக்கட்டுமென விட்டரின் பாதம் சரண் புகுந்தேன்.

இங்கே டவுசரை கழட்டும் விதமாய் இல்லாமல், மெலிதான சிரிப்புகளை தேக்கியவாறே நிமிடங்கள் நகர்ந்து போவதும் சுகமாய்த்தான் இருக்கிறது. டவுசருக்கும் அங்க ஒரு ஐடி கிரியேட் பண்ணியாச்சுல்ல....

இனி அதுலயும் எழுதுவேன். . . .













Saturday, February 6, 2010

டவுசரும் ட்விட்டரும்!

இனி நானும் ட்விட்டுவேனாக்கும்.

https://twitter.com/tavusarpandi

கலி முத்தீடுத்தோன்னா அதான் நானெல்லாம் ட்விட்றேன் . . . . ஹா...ஹா...ஹா