Saturday, February 13, 2010

பதின்ம வயதின் படிமங்கள்....!

பிரபல பதிவரும், நண்பருமான ஜீவன் அவர்கள், பதின்ம நினைவுகளை பகிர அழைத்திருக்கும் ஒரே ஆண் பதிவர் நான் மட்டுமே என்கிற பெருமையை தக்கவைத்துக் கொள்ளவே இந்த உடனடி பதிவு.....ஹா...ஹா...ஹா...

பாசாங்குகள் இல்லாத எனது பதின்ம வயதுகள் மூன்று பகுதியாய், தொடர்பே இல்லாத கொண்டாட்டங்களின் காலம்.

ஆறில் இருந்து பத்தாம் வகுப்பு வரையிலான கூட்டுப்புழு காலம்...

ப்ளஸ் 1, ப்ளஸ் 2 என்கிற இருதலை கொள்ளி காலம்....

கல்லூரியின் காட்டாற்று காலம்.....

ஆறாம் வகுப்பு ....முதல் நாள் வகுப்புக்கு போய்க்கொண்டிருந்த போது, என்னைக் கடந்து ஓடிய ஒருத்தன் , ”நம்ம க்ளாசுக்கு புதுசா ஒருத்தன் வர்றாண்டா” என கூச்சலாய் கட்டியங் கூறியதை, பதின்ம வயதுக்குள் எனது நுழைவின் குறியீடாக இன்னமும் நினைவில் வைத்திருக்கிறேன்..

ஆகக் கடுமையான ஒழுங்குகளை திணிக்கும் அம்மா, அத்தனை எளிதில் நெருங்க முடியாத பரபரப்பில் அப்பா....ஜெயிலில் இருந்து கோர்ட்டுக்கு போகும் விசாரனை கைதிகள் மாதிரி தினமும் பள்ளிக்கு அழைத்துச் சென்று வரும் வேலையாட்கள். அத்தனை சுவாரசியமானதாக இருக்கவில்லை துவக்க நாட்கள்.ஹிந்தி பண்டிட் ஒருவர் தினமும் வீட்டுக்கு வந்து எங்களுக்கு ப்ராத்மிக்கில் இருந்து ஆரம்பித்தார்.நான் விஷாரத்தில் போய் முடித்தேன்.

ஒன்பதாம் வகுப்பிற்கு வந்த போது நிறைய சினிமா ஃபிலிம் ரோல்களை சேகரிக்க ஆரம்பித்திருந்தேன். கருப்பு வெள்ளையில் இருந்து கலர்படம் வரையிலான துண்டு துண்டான பிலிம் ரோல்கள்... அதே மாதிரி சினிமா பாட்டு புத்தகங்கள்.அப்போதைக்கு என்னுடைய நெருக்கமான நண்பன் என்றால் அது இலங்கை வானொலியைச் சொல்லலாம்.கிரிக்கெட் விளையாடவும் வீட்டில் அனுமதி கிடைத்திருந்தது.....

பத்தாம் வகுப்பில்தான் ட்யூசன் ரூபத்தில் பெண்களின் அருகாமை கிடைத்தது.தடிப் பயல்களாய் காலம் கடத்திக் கொண்டிருந்த எங்களுக்கு இதெல்லாம் புதியதாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருந்தது. பெண்கள் எல்லாரும் லட்சணமாய், கலர்கலரான தாவனிகளில் பவுடர் பூச்சு குங்குமத்தோடு, நெஞ்சனைத்த புத்தங்களுடன் வர , நாங்கள் கிரிக்கெட் விளையாடிய கையோடு வேர்க்க விறுவிறுக்க போவோம்.

ஒரு நாள் சுந்தர் சொன்ன பிறகுதான் ட்யூசனுக்கு டவுசர் போட்டுக் கொண்டு போவதன் அபத்தம் பிடிபட்டது. மற்ற பையன்கள் வீட்டுக்குப் போய்,பேண்ட் போட்டுக் கொண்டு ஜம்மென வரும் போது எங்களின் யூனிபார்ம் டவுசர்களினால் நாங்கள் சிறுவர்களாய் பார்க்கப் படுவதாய் நினைக்க ஆரம்பித்தோம் .அப்போதைக்கு கிரிக்கெட்தான் வாழ்க்கையாய் இருந்ததால் பெண்களுக்காய் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.

அரையாண்டு தேர்வு சமயத்தில் நான் விஷாரத் பூர்வார்த் முடித்து விட்டேன். அந்த வயதில் இது பெரிய விசயம். நான் ஹிந்தி பண்டிட் ஆன விசயம் எப்படியோ ட்யூசன் வாத்தியாருக்குத் தெரிய, ஒரு நாள் அவர் எல்லார் மத்தியிலும் சொல்லி, மேன் ஆஃப் தெ மேட்ச் வாங்குகிற சச்சின் டெண்டுல்கர் மாதிரி கூச்சமாய் வெட்கத்தோடு நின்று கொண்டிருந்தேன். அத்தனை பெண்களும் என்னை ஆச்சர்யத்துடன் பார்ப்பதும், கைதட்டியதும் இனம் தெரியாத மகிழ்ச்சியையும், அதை தக்க வைக்க வேண்டுமென்கிற நினைப்பையும் கொடுத்தது. அநேகமாய் இந்த காலகட்டத்தில்தான் நான் வயதுக்கு வந்திருக்க வேண்டும்.

ப்ளஸொன், முதல் க்ரூப். . . .வேலையாட்கள் இல்லாமல் முதல்முறையாக பஸ்ஸில் பள்ளிக்கு செல்ல அனுமதி கிடைத்தது. இதைக் கொண்டாடத் தெரியாத மக்காகவே இருந்தேன். புதூரில் இருந்து செயிண்ட் மேரீஸுக்கு 2B பேருந்து....வழக்கமாய் மற்றவர்கள் போகும் நேரத்திற்கு முந்தைய காலியான பஸ்ஸின் சன்னலோர பயணமே பிடித்திருந்தது. யாருமில்லாத வகுப்பறையில் புத்தக கட்டை எறிந்து விட்டு, பள்ளியின் வளாகத்துள் இருந்த பிரம்மாண்டமான செயிண்ட் மேரி சர்ச்சில் பாவமண்ணிப்பு கேட்பவர்களை வேடிக்கை பார்ப்பதில் முதல் வருடம் கழிந்தது.

ப்ளஸ் 2 துவக்கம், மறுபடியும் ட்யூசன், காலை ஆறு மணிக்கெல்லாம் போயாக வேண்டும். சைக்கிளில் செல்லவும் அனுமதிக்கப் பட்டேன்.இந்த கட்டத்தில் ராதாகிருஷ்ணன் நெருங்கிய நண்பனான். பெண்கள் விஷயத்தில் நான் கிண்ட்டர் கார்டன் நிலையில் இருந்தேன் என்றால் ராதா இளங்கலை முதலாம் ஆண்டில் இருந்தான்.யாரெல்லாம் லவ் பண்றாங்க, அதை எப்படி கண்டுபிடிப்பது, ஒரு பொண்ணு நின்னா என்ன அர்த்தம், நடந்தா என்ன அர்த்தம் பார்த்தா என்ன அர்த்தம்னு உற்சாகமாய் பாடம் சொல்ல, ட்யூசனை விட இதில் ஆர்வம் பெருகியிருந்தது. இந்த வகையில் ராதாதான் என் முதலும் கடைசியுமான குரு....

ஒரு நாள் ராதா, மாப்ளே! உங்க ஏரியால இருந்து ரெண்டு புள்ளைங்க செயிண்ட் ஜோசப் வர்றாளுங்கடா! யார்னு தெரியுமாடா? என கேட்க ரொம்பவும் அவமானமாய் போய்விட்டது. என் ஏரியாவில் இருந்து வரும் பெண்களை எனக்குத் தெரியவில்லை, கொதித்தெழுந்ததன் பலன் ... அதன் பின்னதான கதைகளை எனது பூர்வாசிரம பதிவுகளில் எழுதியிருப்பதால் தேடிப் பிடித்து படித்துக்கொள்ளுங்கள்.

அம்மாவின் அதிரடியான நெறிபடுத்துதலின் பயனாய், எனக்கு மருத்துவம், பொறியியல், விவசாயம் என மூன்றிலும் இடம் கிடைக்க, அம்மா பொறியியலை தேர்ந்தெடுக்க.., இதன் பிறகு அம்மா என்கிற ராக்கெட்டில் இருந்து பிரிந்த வின்கலமானேன், எனக்கான வட்டப் பாதைகளை நானே தீர்மானிப்பதென தீர்மானித்ததும் இங்கேதான். இதன் பிறகான வாழ்க்கையை பழைய நாட்களுடன் ஒப்பிடுகையில் அம்மாவின் மகத்துவம் இப்போது புரிகிறது.

”ஒரு ப்ரொஃபசனல் கோர்ஸ் போன பிறகு உன் இஷ்டத்துக்கு என்ன வேணும்னாலும் பண்ணிக்க, உன்னை யார் கேட்க போறா!” இது அம்மா எனக்கு நீட்டிய கேரட். . . .

ஆக, இப்போது மனதளவில் பழைய கட்டுப் பாடுகளில் இருந்து விட்டு விடுதலையாகி இருந்தேன். படிப்பதை தவிர வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்றே புத்தியும் செயலும் ஓடியது. கையில் தேவைக்கு அதிகமான காசு, புத்தம் புதிதாய் ஒரு கைனட்டிக் ஹோண்டா, புதிதாய் நண்பர்கள்.....தேடல் துவங்கியது.

கிரிக்கெட்,சினிமா,மலையாள பிட்டு படங்கள், நண்பனின் வீட்டில் நீலப்படங்கள் பார்ப்பது, ஒரு ஹோட்டல் விடாமல் படையெடுத்தது,வாரம் ஒரு தடவையாவது கொடைக்கானலில் போய் சுற்றி வருவது, மிக சந்தோஷமான நாட்கள் அவை....தண்ணியும், தம்மும் எனக்கு பிடிக்காததனால் தப்பியது அல்லது தப்பினேன். பரிசோதனைக் கூடத்து எலியைப் போல வாழ்க்கையின் கூறுகளை அலசிய காலம் அது.எல்லைகள் தாண்டுவதில் தயக்கமோ அல்லது பயமோ இருந்திருக்கலாம். அதனால் பெரிதாய் சேதாரம் இல்லாமல் இயல்பானவனாகவே இருந்தேன்.

கிரிக்கெட்டில் நான் அருமையான லெக் ஸ்பின்னர், எந்தவொரு பேட்ஸ்மேனையும் ஐந்திலிருந்து ஆறு பந்துகளுக்குள் தவறு செய்ய வைக்கும் திறமை இருந்தது. கொஞ்சம் முனைப்பு காட்டியிருந்தால் இன்னேரம் நீங்கள் என்னை மைதானத்திலும், விளம்பரஙகளிலும் பார்த்து தொலைத்திருப்பீர்கள்....உங்களின் பூர்வ ஜென்ம புண்ணியம் தப்பித்தீர்கள். நூறு மதிப்பெண்களுக்கு படித்த காலம் போய் பாஸ் மார்க்கை குறிவைத்து படிக்க ஆரம்பித்திருந்தேன். சமயஙகளில் வெற்றியும் கிடைத்தது. அரியர்களுக்கு அஞ்சாநெஞ்சனாய் காலம் என்னை மாற்றியிருந்தது.

பெண்கள், தோழிகள்,காதலிகளை பற்றி தனியேதான் எழுத வேண்டும். அந்த நாட்களில் நான் முழு நேர காதலனாகவே இருந்தேன்.யாரகிலும் ஒருத்தி என்னுடைய நினைவுகளில் தொடர்ச்சியாய் வசித்திருந்தார்கள்.பல நேரங்களில் ஒருதலையாகவும், சில சமயங்களில் இருதலையாகவும்.... என் அருகாமையை அவர்கள் விரும்பினார்கள் அல்லது நான் அதை தக்க வைப்பதிற்காக உழைத்தேன் என்றும் சொல்லலாம். உனக்கான அன்பும், அக்கறையும்,நேரமும் என்னிடத்தில் எப்போதும் இருக்கிறது என்பதை புரிய வைத்தலே என் காதலின் வரையறைகளாய் இருந்தன.

கல்லூரியின் நான்காம் வருடம் பதின்ம வயதில் வராதாகையால்...முடிவாய் சில எண்ணங்கள். வாழ்க்கையை அதன் போக்கில் போக விட்டு ரசிப்பது என்பது இந்த பருவத்தில் மட்டுமே சாத்தியமாகிறது என நினைக்கிறேன். கல்வி மட்டுமே என்கிற கால கட்டாயத்தில், அதைத் தாண்டிய உலகம் மீதான ஈர்ப்பும், அதை புரிந்து கொள்வதற்கான குருட்டு தைரியமும், திருட்டுத் தனங்களுமே அந்த நினைவுகளை இன்றைக்கும் சுவாரசியமானதாக தக்க வைத்திருக்கிறது என நினைக்கிறேன்.

நேற்றைக்கு எப்படியிருந்தேன் என்பதோ, நாளைக்கு எப்படியிருப்பேன் என்பதோ முக்கியமில்லை....இன்றைக்கு நான் என் சுற்றத்தின் விருப்பத்திற்குறியவனாய் இருக்கிறேனா என்பதே என் வரையில் முக்கியம். அதற்கான முயற்சியே என் வாழ்க்கை !

இது தொடர் பதிவாகையால் நான் ரசிக்கும், விரும்பும், மதிக்கும்...இப்படி ஏகப்பட்ட பில்ட்டப்புகளை தக்க வைத்திருக்கும் மங்கை, காட்டாறு இருவரையும் அழைத்திட விரும்புகிறேன்.

இருவரும் மூத்த அல்லது வயதான பதிவர்கள் என்பதால் இந்த அழைப்பினை ஏற்கும் அல்லது நிராகரிக்கும் உரிமையினை அவர்களிடமே விட்டு விடுகிறேன் ....ஹி...ஹி...



5 comments:

  1. அன்புள்ள தோஸ்த்து பாண்டி அவர்களுக்கு டவுசர் பாண்டி , எழ்திக்கீர மடல் இல்ல கடுதாசி எப்பிடியோ ஒன்னு !!

    இன்னைக்கி தான் உங்க பிளாக் பாத்தேன் பா !! இன்னாடா இது இன்னு ஒரே கொயப்பாமா பூடுச்சி !! எனக்கு மட்டு இல்ல பதிவுலகத்துக்கு கூட தாம்பா !!

    இதுக்கு இன்னா பண்றது ? இன்னு ஒரு ரோசன சொல்லு தலீவா !!

    ReplyDelete
  2. கவலைப் படாதீர்கள் நண்பரே!.....என்னால் உங்களின் புகழுக்கு எவ்வித குந்தகமும் வராது. நிற்க எனது இந்த பதிவு எந்த திரட்டியிலும் இனைக்கப் படவில்லை. குறிப்பிட்ட சில பதிவர்களைத் தவிர பெரிதாக யாருக்கும் இந்த பதிவு தெரியாது.

    பெயர்களைப் பிடித்துக் கொண்டு தொங்குவதிலும் எனக்கு உடன்பாடில்லை. நான் யாரென்பதை கடந்த ஐந்து ஆண்டுகளாய் பதிவுலகில் என்னை தொடரும் மிகச் சில வாசகர்களுக்கு மட்டும் தெரிந்தால் போதுமென நினைக்கிறவன்.

    மேலும் வரும் மாதங்களில் இந்த பெயரைத் துறந்துவிடும் யோசனையும் இருக்கிறது. உங்கள் பணி மற்றும் பாணி தொடர வாழ்த்துகள்.

    அன்பன்
    டவுசர் பாண்டி.

    ReplyDelete
  3. நாங்கெல்லாம் டவுசரைக்கிழிச்சுட்டு நாயா அலைரோம்ப்பா. உங்க ரெண்டு பேர்ல யாராச்சும் ஒருத்தரு பீலாயி ஒரு பைஸலுக்கு வாங்கப்பா.

    ReplyDelete
  4. உங்களது பழைய எழுத்து நடை ...! அருமையாய் இருக்கிறது..!

    ///இதன் பிறகு அம்மா என்கிற ராக்கெட்டில் இருந்து பிரிந்த வின்கலமானேன்,//
    ;;)

    ஆனாலும் உங்களுக்கு தில்லு அதிகம்தான்;;;))))

    ReplyDelete
  5. mootha pathivargal a mathichu kooptathukku indha ilavattathukku dank u...

    pathinma vayasula oivillaama raa pahala ulaichirukkeengannu theriyuthu...

    ReplyDelete