Tuesday, February 16, 2010

சென்னையின் மொழி !

ஏன் இப்படியான பதிவினை எழுத நேரிட்டது?

பின் கதை கொஞ்சம்.....

கடந்த பதிவின் பின்னூட்டத்தில், சகபதிவர் ஒருவர் 'டவுசர் பாண்டி' என்கிற பெயரில் பதிவெழுதுவதாய் தெரிய வந்தது. இத்தனை நாளாய் அவர் என் கண்களிலோ, அல்லது நான் அவர் பார்வையிலோ வராமல் போனது தற்செயலானது என்றே நம்புவோம்.என்னுடைய பதிவின் முகவரி கூட http://tavusarpandi.blogspot.com .தான் மட்டுமே டவுசர் என நினைத்திருந்தவர் ரொம்பவும் கவலையாகி விட்டார். அவருக்கு நிம்மதி தரும் வார்த்தைகளை பின்னூட்டத்திலும் பின்னர் அவரின் பதிவிலும் சொல்லி விட்டேன்.

அவரின் பதிவினை மேய்ந்த போதுதான், இப்படியான ஒரு பதிவினை எழுதிட தீர்மானித்தேன். எனது பதினாலு வருட சென்னை வாழ்க்கையின் அனுபவத்தை முன் வைத்து சென்னையின் மொழியின் ஊடான எனது பயணத்தையும், பார்வைகளையும் பதிந்து வைப்பது அவசியமென படுகிறது. மற்றபடி யாரையும் விமர்சிக்கும் நோக்கமில்லை.

பொதுவில் சென்னையின் மொழி என்றவுடன் அடையாளம் காட்டப் படுவது, அல்லது நமது நினைவடுக்குகளில் பதிய வைக்கப் பட்டிருப்பது, மனோரமாவும், தேங்காய் சீனிவாசனும், லூஸ் மோகனும் பேசிய மிகைப் படுத்திய நாடகத் தமிழ்தான். நிதர்சனத்தில் அத்தனை கேவலமாய் இங்கே யாரும் மொழியாடுவதில்லை. மேட்டுக்குடி வசனகர்த்தாக்கள் தனக்கும் கீழ் நிலை மனிதன் மீது திணித்த ஒரு அடையாளம்தான் மெட்ராஸ் பாஷை.

உண்மையில் சென்னைத் தமிழ் என்பது மூன்று அடுக்குகளால் ஆனது. சென்னையின் மேல்தட்டு வர்க்கம் இந்தியா முழுமையாக இருந்து வந்த குடியேறிகளினால் உருவானது. பெரும் செல்வந்தர்களும், தொழில் முனைவோரும் இதில் அடங்குவர். என் அனுபவத்தில் சென்னையின் பூர்வகுடிகள் யாரும் இந்த மேல்தட்டில் இருப்பதாய் தெரியவில்லை. தொழில் மற்றும் இங்கிருக்கும் வசதி வாய்ப்புகளை மட்டுமே முன்வைத்தும் குடியேறியவர்கள் இவர்கள்.

இவர்கள் தங்களின் பணியாட்கள் அல்லது பொருளாதாரத்தில் கீழே இருப்பவர்களுடன் தொடர்பு கொள்ள மட்டுமே தமிழை உபயோகிக்கிறவர்கள் . இது பிழைப்புவாதம் மற்றும் அதிகாரவர்க்கத்தின் அலட்சிய தமிழாகவே இருக்கிறது. தமிழை மென்று தின்னும் புண்ணியவான்கள்.அண்டை மாநிலத்தவர்கள் இம்மாதிரி தமிழை கையாளுவதைக் கூட ஒருவகையில் நியாயப் படுத்தி விடமுடியும். ஆனால் பிறப்பால் தமிழர்களானவர்களே தாய்மொழிக்கான இழிவை தரத் தயங்குவதில்லை. இவர்களின் தற்போதைய தலை முறையினருக்கு தமிழை வாசிக்க கூட தெரியாது என்பதுதான் நிதர்சனம்.

இரண்டாம் அடுக்கில் இருப்பவர்கள், நடுத்தர வர்க்கம் எனப்படும் வேலைக்குச் சென்று பொருளீட்டுபவர்கள். இவர்கள் மாநிலம் முழுவதும் இருந்து குடியேறியவர்கள். இவர்கள்தான் சென்னையின் மொழியில் பிரதான பங்கு வகிப்பவர்கள். கலைத் துறை, அரசியல்,அரசாங்க பணி, தனியார் நிறுவன பணிகள் என எங்கும் வியாபித்திருப்பவர்கள். தங்கள் வேரின் மொழியினை சென்னையின் தமிழோடு கலக்க விடாத பிடிவாதத்துடன் இருப்பவர்கள். மதுரையோ, திருநெல்வேலியோ,கொங்குதமிழோ.....அதன் இயல்பும் அழகும் மாறாமல் தமிழாடுபவர்கள் இவர்களே.

மூன்றாம் அடுக்கில் இருப்பவர்களின் மொழிதான் சென்னையின் மொழியாய் அடையாளம் காட்டப் படுகிறது. நான் பார்த்தவரையில் இவர்கள் சிறுபான்மையினர். வடசென்னை பகுதியில்தான் இம்மதிரியான மொழிநடை பயன்பாட்டில் இருக்கிறது. பொருளாதார ரீதியாக பின் தங்கிய மீனவர்கள், தொழிளாளர்கள்,ஆட்டோ மற்றும் ரிக்‌ஷா ஓட்டுனர்கள், அன்றாட தினக்கூலி செய்வோர் என எளிதில் இவர்களை வகைப் படுத்திடலாம்.

முறையான கல்வியோ, அல்லது மொழி அறிவோ கிடைத்திட வாய்ப்பற்ற ஒரு பாமரனின் முயற்சியாகவே இந்த பேச்சுத் தமிழைச் சொல்லுவேன். எந்த விதமான வரையறைகளோ, நிர்பந்தங்களோ இல்லாது ஒருவரின் கற்பனை மற்றும் தேவைக்கேற்ப வளர்த்துக் கொள்ளும் லாகவம் இதில் இருக்கிறது. ஓரம் கத்தரிக்கப் பட்ட ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி வார்த்தைகளின் கலவையான மொழி. அலங்காரமோ, தொடர்பு வார்த்தைகளோ இல்லாத காரியவாதியின் மொழிநடை இது.

பதிவின் நீளம் கருதி வரும் நாட்களில் இதை தொடராய் தொடர்கிறேன்....

7 comments:

  1. அருமையா இருக்கு... சொன்ன மாதிரி

    //முறையான கல்வியோ, அல்லது மொழி அறிவோ கிடைத்திட வாய்ப்பற்ற ஒரு பாமரனின் முயற்சியாகவே இந்த பேச்சுத் தமிழைச் சொல்லுவேன். எந்த விதமான வரையறைகளோ, நிர்பந்தங்களோ இல்லாது ஒருவரின் கற்பனை மற்றும் தேவைக்கேற்ப வளர்த்துக் கொள்ளும் லாகவம் இதில் இருக்கிறது. ஓரம் கத்தரிக்கப் பட்ட ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி வார்த்தைகளின் கலவையான மொழி. அலங்காரமோ, தொடர்பு வார்த்தைகளோ இல்லாத காரியவாதியின் மொழிநடை இது.///

    உண்மை உண்மை...

    யாரும் இது வரை சென்னை தமிழை இப்படியான ஒரு கண்ணோட்டத்தில் பார்த்திருக்க மாட்டாங்க... நானும் நினைப்பேன்...ஏன் இப்படி தமிழை கடிச்சு துப்பறாங்கன்னு...

    நல்லா வந்திருக்கு

    ReplyDelete
  2. சென்னை தமிழில் நிறைய மேட்டர் இருக்கு போல

    சரி தொடருங்கள் - நாமும் தொடர்ந்து கற்போம்.

    ReplyDelete
  3. சென்னை தமிழை செந்தமிழால் அலசி இருக்கின்றீர்கள்..!

    எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கிறது..!

    //மேட்டுக்குடி வசனகர்த்தாக்கள் தனக்கும் கீழ் நிலை மனிதன் மீது திணித்த ஒரு அடையாளம்தான் மெட்ராஸ் பாஷை.///

    இது முற்றிலும் உண்மை...!

    எழுத்தும்... நடையும்..பார்வையும் ..உயர்தரம்..!

    ReplyDelete
  4. எழுதுங்க பாண்டி, கொங்குக்காரங்களும் மெட்ராஸ் தமிள கத்துக்கிறோம்.

    ReplyDelete
  5. //என்னுடைய பதிவின் முகவரி கூட http://tavusarpandi.blogspot.com .தான் மட்டுமே டவுசர் என நினைத்திருந்தவர் ரொம்பவும் கவலையாகி விட்டார். அவருக்கு நிம்மதி தரும் வார்த்தைகளை பின்னூட்டத்திலும் பின்னர் அவரின் பதிவிலும் சொல்லி விட்டேன்.//

    நான் கவலைப் படுவதற்காக , எழுதியதற்கு நன்றி , pandi என இருக்கிறது , பாண்டி என்றால் paandi என தானே டைப் செய்ய வேண்டும்,

    நான் எப்போது டவுசர் பாண்டி என பெயர் வைத்தேனோ , அப்போதே , tavusarpaandi .blogspot .com என்பதையும் சேர்த்து தான் ப்ளாக் ஆரம்பித்தேன் ,என சொல்லிக் கொள்கிறேன் . மேலும்,

    இது போல சில வார்த்தைகளை நாமே தெரியாமல் பேசுவோம் , உதாரணமாக ,யாருக்காவது ,உடல் நிலை சரியில்லை என சொன்னால் , உடனே நாம் , டாக்டராண்ட போனியா ? என தானே கேட்போம் , மருத்துவரிடம் சென்றாயா ? என்றா கேட்போம் !!
    மற்றும் ஒரு உதாரணம் , யாராவது போன் செய்து உடனே வா என கூப்பிட்டால், இன்னாத்துக்கு ? என்று கேட்பீர்களா ? இல்லை , நான் எதற்க்காக வர வேண்டும் ? என்று கேட்பீர்களா ?

    மொழி என்பதைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும் . யாரும் எழுத்து நடையில் பேசுவது இல்லை , அப்படி பேசுபவர்களை இந்த சமுதாயம் எப்படி பார்க்கின்றது , எனவும் தெரியும் .

    எனவே இது கற்பனையான ஒரு மொழி இல்லை , இன்றளவும் உள்ள நம்மிடையே சிறிது மாறுபட்டாலும் உள்ள மொழி என தெரிவித்துக் கொள்கிறேன் . நன்றி .

    ReplyDelete
  6. //எனது பதினாலு வருட சென்னை வாழ்க்கையின் அனுபவத்தை முன் வைத்து //

    வெறும் பதினாலு வருடத்திலேயே , நீங்கள் மொழி ஆராய்ச்சி நடத்தி விட்டீர்களே !! அப்படி என்றால் , நீங்கள் இன்னும் இது போல பேசும் ஏரியாக்களுக்கு போனதில்லை , என் தெரிகிறது , அல்லது போக இது வரை சந்தர்ப்பம் கிடைக்கவில்லை , என தெரிகிறது !! இந்த நவீன கணினி உலகத்தில் சிறிது மாற்றம் ஏற்பட்டு இருக்கலாமே தவிர முற்றிலும் அழிந்து விடவில்லை . இப்படிக்கு சென்னை வாசி .டவுசர் பாண்டி .

    ReplyDelete
  7. அன்பின் டவுசர் பாண்டி அவர்களே !

    தங்களின் விளக்கத்திற்கு நன்றி!, சென்னையின் மொழி என்பதன் அடிப்படைகளை மட்டுமே மேல விவரித்திருக்கிறேன். அதன் நீள அகலங்களுக்குள் நான் இன்னமும் நுழையவே இல்லை.

    இந்த பதிவு சென்னையின் மொழி குறித்த எனது பார்வை மட்டுமே!, யாரையும் அதிலும் குறிப்பாய் உங்களின் எல்கைகளையோ அல்லது அதன் புரிதல்களையோ விமர்சிக்கும் பதிவு இல்லை.

    ReplyDelete