Tuesday, March 2, 2010

நித்யானந்தருக்கு நன்றி...

நான் நித்யானந்தரின் செயல் பாடுகளை விமர்சன பதிவாக, ”ப்ளாஸ்டிக் புன்னகையும், நித்யானந்த அனுபவமும்” எழுத ஆரம்பித்து தொடர இருந்த சூழ்நிலையில் இன்றைக்கு சன் டிவியின் புண்ணியத்தால் பெரிதான ஆச்சர்யங்கள் ஏதுமில்லாமல் இத்தனை சீக்கிரத்தில் அவரின் ஆன்மீக வியாபாரம் முடிவுக்கு வந்ததை எண்ணி பரிதாபமே மிஞ்சுகிறது.

மிகவும் நேர்த்தியாக எடிட் செய்யப் பட்டிருக்கும் அந்த வீடியோவில், நித்யானந்தர் என்கிற ராஜசேகரனுக்குள் இருக்கும் காதலும், காமமும் கடை விரிக்கப் பட்டிருக்கிறது.”உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும், உன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்” என்கிற கவியரசரின் அனுபவ ஞானத்தின் வீர்யத்தை இனிவரும் நாட்களில் இவரின் விசயத்தில் நாம் காணப்போகிறோம்.

நேற்றுவரை அவரை ஆராதித்தவர்கள் இனிமேல், ”நான் அன்னிக்கே சொன்னேன்”...என்று தங்களை காத்துக் கொள்ளும் நாடகங்களும் அரங்கேறும். இனி வரிசையாய் சில பெண்கள் என்னை கெடுத்தார் என கிளம்பி வரலாம்.தொழில்(!) போட்டியால் எதிர்வரிசை சாமியார்கள் பண்ணிய செட்டப் என நித்யானந்த கோஷ்டியினர் சோக நாடகம் போடலாம்.

எது எப்படியோ, முற்றும் துறந்தவர் என்றும் எல்லாம் கடந்தவர் என்றும் தன்னைச் சுற்றி நிர்மானித்து வைத்திருந்த பிம்பம் உடைந்து சிதறியதை அந்த இளைஞர் வரும் நாட்களில் எப்படி எதிர் கொள்ளப் போகிறார் என்பதே என்னுடைய ஆர்வமான எதிர்பார்ப்பு. CRISIS MANAGEMENT என்பது மிகச் சிரமமான ஒரு கலை. பொறுத்திருந்து பார்ப்போம்.

இனி தலைப்புக்கு வருவோம்.....

இனி வரும் நாட்களில், அவரின் இத்தனை நாளைய ஆன்மீகமும், போதனைகளும் மறந்து போய் ஒரு கீழ்த்தரமான மனிதராய் இந்த சமூகத்தால் பார்க்கப் படுவார், பரிகசிக்கப் படுவார். பொய்யான பிம்பங்களை கட்டமைப்பதில் உள்ள ஆபத்து இதுதான். எல்லாம் மாயை எனச் சொல்லும் இவர்கள் புகழுக்கும், பணத்துக்குமாய் கடவுள் வேஷம் கட்ட தயங்காதவர்கள் என்பது முரண் நகை.

இயல்பாய் இருத்தல் என்பது விலங்குகளில் மட்டுமே சாத்தியம். மனிதன் உடையனியத் துவங்கிய போதே இயல்பு விலகிவிட்டது.வேஷங்கள் என்பது இல்லாமல் மனிதம் இல்லையென்றாலும், மிகை வேஷங்களில் எனக்கு எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை.

இதுவரையிலான வாழ்க்கையில் எனது பலம்,பலவீனங்களை பெரிதாய் மறைத்ததில்லை,இயல்பானவனாகவே இருந்திருக்கிறேன், அல்லது என்னை மற்றவர்களைக் காட்டிலுமான மிகை மனிதனாய் நிர்மானித்துக் கொள்ளும் முனைப்பும் இருந்ததில்லை.பொய்யான பாவனைகளினால் பிம்பங்களை கட்டமைக்காமல் போனதினால் சமயங்களில் எனக்கு பாதகமும் நேர்ந்திருக்கிறது.

அவ்வப்போது இது குறித்த கவலைகள் எனக்குள் வருவதுண்டு. ஆனால் இப்போது இதை எழுதும் சமயத்தில் இதுவரையிலான எனது நிலைப்பாடுகள் குறித்த பெருமிதமே ஓங்கியிருக்கிறது. இதற்காகவேனும் அந்த இளைஞருக்கு எனது நன்றிகளை உரித்தாக்க வேண்டும்......

3 comments:

  1. செய்தியை குறித்த உங்கள் பார்வையை நான் மதிக்கின்றேன்.

    ReplyDelete
  2. sex என்பதை ஒரு tabooவா நினச்சுட்டு இருக்கும் இந்த சமூகம்...முற்றும் துறந்தவன் என்ற ஒரு போர்வையில் வர்ரவனை ஆராதிப்பதால் வரும் விளைவுகள் இது...

    இப்படி இருந்தா தான் வியாபாரம் ஆகும்னு ஹிப்போக்ரிடிக்கா இருப்பதை எந்த மாரல் வேல்யூஸ் ம் தடுப்பதில்லை...

    The essence of immorality is the tendency to make an exception of myself.... இது யாரோ ஒருத்தர் சொன்னது...

    நீங்க சொன்ன மிகை வேஷம்...பொய்யான பிம்பங்கள்..இதெல்லாம் கூட கூட இது மாதிரி தப்புக்கள் அதிகரித்துக் கொண்டே தானிருக்கும்.. நீங்க சொல்ல வந்த கருத்து நல்ல படியா உள்வாங்கப்படனும்...

    ReplyDelete
  3. ///மிகை வேஷங்களில் எனக்கு எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை.///

    அன்ன நடை நடக்க ஆசைப்பட்டு தன் நடையை மறந்த காக்கையின் நிலை ஆக்கிவிடும்
    இந்த மிகை வேசங்கள்..!

    இந்த நித்யா வுக்கும் அதுவே நேர்ந்து இருக்கிறது ...!

    ReplyDelete