கீழேயுள்ள இனைப்பினை சொடுக்கி முதல் பாகத்தினை படித்த பின்னர் இந்த பதிவினை தொடர வேண்டுகிறேன்.
இஸ்லாம் - தமிழ் : ஒரு வரலாற்றுப் பார்வை -1
முந்தைய பதிவில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய வகைகளை பற்றிய அறிமுகத்துடன் , மஸலா வகை இலக்கியம் தொடர்பான தகவல்களை படித்திருப்பீர்கள். தொடர்ச்சியாய் இந்த பதிவில் ”கிஸ்ஸா” வகை இலக்கியம் பற்றி நான் அறிந்தவைகளை தருகிறேன்.
‘கஸஸ்' என்கிற அரபிச்சொல்லின் நீட்சிதான் இந்த கிஸ்ஸா, 'கதை கேட்டல்' என்கிற அர்த்தம் தரும் சொல் இது. கதை கேட்பதென்பது மனித இனத்தின் மிக சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று, இன்றைய நவீனங்களின் வளர்ச்சியில் கதை கேட்டலின் முறை மாறியிருந்தாலும், இந்த நுட்பத்தின் மீதான ஆவலும், ஆச்சர்யமும் மாறாது இன்றைக்கும் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன.
இஸ்லாமிய வரலாற்று போக்கின் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டவைதான் இந்த கிஸ்ஸா இலக்கிய வகை....கேட்போரை தன்பால் கட்டியிழுத்து மார்க நெறிகளையும் அதன் மான்புகளையும் கேட்போர் மனதில் பொதிந்து வைக்க இவ்வகை இலக்கியங்கள் பயன் பட்டன என்றால் மிகையில்ல்லை. முந்தைய மஸலா இலக்கிய வகையினை விட பெரிதும் விரும்பப்பட்ட இலக்கிய வகையாக இதை சொல்லலாம்.
கிஸ்ஸா வகை இலக்கியங்களுக்கு என தனியான தெளிவான வரையறைகள் ஏதுமில்லை. அவை செய்யுள் வடிவிலும், உரை நடையாகவும், இவையிரண்டும் கலந்தும் காணப்படுகின்றன. தமிழில் இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட கிஸ்ஸா இலக்கியங்கள் இருப்பதாக தெரிகிறது. இவற்றில் பெரும்பாலானவை இஸ்லாமிய வரலாற்றுச் சம்பவங்களை அடிபப்டையாக கொண்டவையாகவும், மற்றவை வரலாற்று புனைவாக இஸ்லாத்தின் உயர் நெறிகளை முன்னிறுத்தும் வகையில் படைக்கப் பட்டிருக்கின்றன.
சில புகழ்பெற்ற கிஸ்ஸா இலக்கியங்களை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்....
- ஈசுபு நபி கிஸ்ஸா
- அலி(ரலி) கிஸ்ஸா
- இஸ்வத்தூர் நாச்சியார் கிஸ்ஸா
- முகமது அனிபு கிஸ்ஸா
- சைத்தூள் கிஸ்ஸா
- ஷம்ஊன் கிஸ்ஸா
- கபன் கள்ளன் கிஸ்ஸா
இவற்றுள் வடிவில் 'இஸ்வத்து நாச்சியார் கிஸ்ஸா' பெரியதாகவும், 'கபன் கள்ளன் கிஸ்ஸா' வடிவில் சிறிய கிஸ்ஸாவாக விளங்குகின்றன.
தமிழக முஸ்லீம்களிடையே மிகவும் புகழ் பெற்றதும், இலக்கிய செறிவு நிறைந்தது ஈசுபு நபி கிஸ்ஸாவாகும்..இதனை படைத்தவர் தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டையினை சேர்ந்த மதாறு சாஹிபு புலவராவார். இந்த நூல் ஹிஜ்ரி1170 ம் ஆண்டில் இயற்றப் பட்டதாக தெரிகிறது. இந்த நூல் யாக்கூபு நபியின் மகனாக பிறந்த ஈசுபு நபியின் வரலாற்றினை கூறுகிறது.
ஈசுபு நபி கிஸ்ஸாவிற்குப் பின்னர் பெரிதான வரவேற்பினை பெற்றது சைத்தூள் கிஸ்ஸாவாகும். இது ஒரு வரலாற்று புனைவிலக்கியம் எனலாம். இதில் குறிப்பிடப்படும் வரலாற்று நிகழ்வுகளுக்கு ஆதாரம் இல்லை என்பது குறிப்பிட தக்கது. ஆனால் ஆச்சர்யகரமாய் இஸ்லாத்தின் புகழ் பெற்ற மாந்தர்களை பற்றிய குறிப்புகள் நூலின் நெடுகில் விரவியிருக்கின்றன.எளிய தமிழில் காணப்படும் இந்த நூலை இயற்றியவர் பேட்டை ஆம்பூரைச் சேர்ந்த அப்துல் காதர் சாஹிபு ஆவார்.
பதிவின் நீளம் கருதி இந்த அளவில் கிஸ்ஸா இலக்கியம் தொடர்பான தகவல்களை நிறைவு செய்கிறேன்....அடுத்த பதிவில் ”நாமா” வகை இலக்கியம் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.
கிஸ்ஸா என்ற பெயர் மட்டுமே கேட்டதுண்டு. அதன் அர்த்தம் கூட தெரியாமல் இருந்தேன். இந்த இடுகை மூலம் ஓரளவு தெளிவு பெற்றேன். நன்றி நண்பரே!
ReplyDeleteதேடிப்போய் படிக்கத் தோனாத விஷயங்களை எளிமையான, ஆர்வத்தோடு படிக்க தூண்டும் நடையில கொடுத்துட்டீங்க...சீக்கிறம் அடுத்தும் எழுதீடுங்க..நன்றி
ReplyDeleteநல்ல தகவல்கள் அடங்கிய சிறப்பான பதிவு ..!
ReplyDeleteஅடுத்த பதிவை ஆவலுடன் எதிர் நோக்கி ...!
மிக ஆழமான வரலாற்று தகவல்கள் தொடரட்டும்...
ReplyDelete