Thursday, November 5, 2009

இஸ்லாம் - தமிழ் : ஒரு வரலாற்றுப் பார்வை -3

இஸ்லாம் - தமிழ் : ஒரு வரலாற்றுப் பார்வை -1

இஸ்லாம் - தமிழ் : ஒரு வரலாற்றுப் பார்வை -2

இஸ்லாமிய தமிழறிஞர்கள், தமிழுக்கு தந்த மற்றொரு கொடை நாமா வகை இலக்கியங்களாகும். ”நாமே” என்கிற பாரசீக மொழியின் தழுவலாகவே நாமா குறிக்கப் படுகிறது. இதற்கு ‘வரலாறு' என பொருள் படும்.

அருஞ்செயலாற்றிய இஸ்லாமிய பெரியார்களின் வரலாற்றினை தருவதே இவ்வகை இலக்கியத்தின் நோக்காய் இருந்தது. தமிழில் சுமார் பதினாறு நாமா இலக்கியங்கள் இருப்பதாய் தெரிகிறது. இவற்றுள் புகழ் பெற்ற சில நாமாக்களையும் அது தொடர்பான தகவல்களையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

நூறு நாமா

மிஃஹ்றாஜ் நாமா

இருஷாது நாமா

சங்கறாத்து நாமா


நூறு நாமா அல்லது நூர் நாமா :

பாரசீக மொழியில் 'இமாம் கஸ்ஸாலி' என்பாரால் இயற்றப்பட்ட நூலின் தழுவலே இந்த நூறு நாமா. இதை நூர் நாமா என்றே அழைத்திட வேண்டும். நூர் என்கிற பாரசீக சொல்லுகு ஒளி என பொருள்தரும்.

'தொங்கல்'* எனும் செய்யுள் வடிவில் அமைந்த இருநூறு பாக்களில், இறைவன் ஒளியால் உலகத்தை படைத்தான் என்பதை மனித இனத்தின் வரலாற்றுப் பார்வையில் விவரிக்கும் நூல் இது. இதை இயற்றியவர் காயல் பட்டினத்தைச் சேர்ந்த செய்யது அஹமது மரைக்காயர் என்பார் ஆவார்.

மிஃஹறாஜ் நாமா

அய்யம்பேட்டை மதாறு சாஹிபு புலவரால் இயற்றப் பட்ட இந்த நூல் நபிகள் நாயகமவர்கள் வானவர்கோன் ஜிஃப்ரீல்(அலை) அவர்கள் துனையுடன் விண்ணேற்றம் பெற்று இறைச் சந்நிதானம் அடைந்து மீண்ட வரலாற்றினை விவரிக்கிறது.இஸ்லாமியர்களின் ஐம்பெருங் கடமைகளை பற்றியும் இந்நூல் விவரிக்கிறது.

இருஷாது நாமா

தன்னை வணங்குவதற்கென்றே இறைவன் மனிதனை படைத்தான் என்கிற மரபு இஸ்லாத்தில் உண்டு. இதற்கு மாறாக இறைச்சிந்தனை இல்லாது, ஒழுக்கநெறி தவறி இம்மையில் வாழ்வோருக்கு மறுமையில் இறைவன் சந்நிதானத்தில் எத்தகைய தண்டனைகளை தருகிறான் என்பதை விளக்கிடும் நூல்தான் இருஷாது நாமா.

காயல் ஷமூனா லெப்பை எனப்படும் ஷாமு நைனா லெப்பை என்பாரால் இயற்றப் பட்டது இந்த நூல். மனித குல மேன்மைக்கு தொழுகை எத்தனை அவசியமானது என்பதை வலியுறுத்தும் அருமையான நூல் இது. 'இர்ஷாத்' என்கிற அரபி நூலின் தழுவலே இருஷாது நாமா.

சக்கறாத்து நாமா

நாமா வகை இலக்கியங்களுள் மிகவும் புகழ் பெற்றது சக்கறாத்து நாமாவாகும்.பேட்டை ஆம்பூர் அப்துல் காதிர் சாஹிபு அவர்களால் இயற்றப் பட்டது இந்த நூல். நூறு பாக்களை உள்ளடக்கிய இந்த நூல் பெரும்பாலும் 'தொங்கல்'* எனப்படும் செய்யுள் வடிவில் அமைந்திருந்தாலும் ஆங்காங்கே வென்பாக்களும் இடம் பெற்றிருக்கிறது.

மரணம் என்பது மனிதகுலம் உட்பட எந்த ஒரு உயிரினமும் தவிர்க்க இயலாதது. மரணத்தின் அருகாமையில் மனிதன் அனுபவிக்கும் வலி மற்றும் வேதனை தொடர்பான அனுபவங்களையும், அவற்றில் இருந்து விடுபட தேவையான இறைச்சிந்தனை மற்றும் விவரித்துக் கூறும் நூல் இது.

* அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தத்தையே இஸ்லாமிய தமிழ் அறிஞர்கள் ”தொங்கல்” என வழங்குவர்

2 comments:

  1. நல்ல தகவல்கள்....இது வரை எங்கும் கேள்விப்படாத விஷ்யங்கள்..நன்றி

    ReplyDelete
  2. நல்ல பதிவு..! அபூர்வ,அறிந்திடாத தகவல்கள் நன்றி ..!

    ReplyDelete